
விழுப்புரம்,
புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 31). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர் சென்னை தியாகராய நகரை சேர்ந்த மணிகண்டன் மகள் கீர்த்திகா(26) என்பவரை காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்தநிலையில் கீர்த்திகா சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சிறுவாடி கிராமத்தில் உள்ள தனது தாய்மாமன் சதீஷ் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நானும், எனது கணவரும் உங்களுடைய வீட்டிற்கு வந்துகொண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் சதீஷ் வீட்டிற்கு செல்லாமல் முருக்கேரி ஏரிக்கரைக்கு சென்றனர். பின்னர், இருவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த விஷத்தை எடுத்து குடித்தனர். சிறிது நேரம் கழித்து சதீசை மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட கீர்த்திகா, நானும், எனது கணவரும் முருக்கேரி ஏரிக்கரைக்கு வந்து விஷம் குடித்துவிட்டதாக தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ் ஏரிக்கரைக்கு விரைந்து வந்தார்.
அப்போது மயங்கிய நிலையில் கிடந்த கீர்த்திகா, பார்த்திபன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக முருக்கேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே கீர்த்திகா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பார்த்திபனை மேல்சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே தகவல் அறிந்து வந்த பிரம்மதேசம் போலீசார் உயிரிழந்த கணவன்-மனைவியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.