
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஆஷ்லே கார்ட்னர், நிச்சயதார்த்தம் ஆகி ஒரு வருடத்திற்குப் பிறகு தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்து கொண்டார். தன்பாலின ஈர்ப்பாளர்களான இவர்களது திருமணம் இவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
அவர்களது திருமண விழாவில் கார்ட்னரின் நெருங்கிய கிரிக்கெட் தோழிகளான அலிசா ஹீலி, எலிஸ் பெர்ரி, கிம் கார்த், எலிஸ் வில்லானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கார்ட்னர் கடந்த மாத இறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியில் ஒருவராக டி20 தொடருக்காக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தார். மேலும் குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணியின் கேப்டனாகவும் மார்ச் 13ம் தேதி வரை இந்தியாவில் WPL 2025 சீசன் முழுவதும் விளையாடினார்.
ஆஷ்லே கார்ட்னர் 2017 ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை, அவர் ஆஸ்திரேலிய அணிக்காக 7 டெஸ்ட், 77 ஒருநாள், 96 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
ஒரு அனுபவமிக்க ஆல்ரவுண்டரான ஆஷ்லே கார்ட்னர், அபாரமான வலது கை பேட்ஸ்மேன் ஆவார். அனைத்து சர்வதேச வடிவங்களிலும் 3,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார், மேலும் தனது வலது கை ஆப்-பிரேக் பந்துவீச்சு மூலம் 207 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் 2018, 2020, 2023 ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணியிலும், நியூசிலாந்தில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை அணியிலும் ஆஷ்லே கார்ட்னர் இடம்பிடித்திருந்தார்.