
மும்பை,
மராட்டிய மாநிலம் துலே மாவட்டம் ஷிர்புர் தாலுகா ரோகினி கிராமத்தை சேர்ந்தவர் திருப்தி(வயது24). இவரது தந்தை கிரண் மாங்ளே (50), ஓய்வுபெற்ற துணை ராணுவ அதிகாரி ஆவார். திருப்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி புனே மாவட்டம் கோத்ருட் பகுதியை சேர்ந்த அவினாஷ்(28) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். மேலும் திருமணத்துக்கு பிறகு திருப்தி பெற்றோருடன் தொடர்பில் இல்லாமல் இருந்தார்.
இந்தநிலையில் ஜல்காவ் மாவட்டம் சோப்டா தாலுகாவில் நடந்த திருமணத்தில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் திருப்தி, கணவர் அவினாசுடன் சென்றார். அதே திருமணத்தில் கிரண் மாங்ளேவும் கலந்து கொண்டார்.
இதில் காதலித்து திருமணம் செய்த மகளை, கணவருடன் பார்த்தவுடன் கிரண் மாங்ளேவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. எனவே அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் மகளை நோக்கி சரமாரியாக சுட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவினாஷ் மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது, அவர் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்தனர். இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மகள், மருமகனை துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற துணை ராணுவ அதிகாரியை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
தகவல் அறிந்து சென்ற போலீசார் 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு திருப்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மேலும் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த அவினாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த கிரண் மாங்ளேவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.