
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கடந்த 2022-ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. 2022-லிருந்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வருகிற மே 6-ம் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக அவரிடம் ஏற்கெனவே கடந்த 2022-ம் ஆண்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.