செஞ்சி: காதலிக்க வற்புறுத்தி பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தவெக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தலைமறைவான தவெக மாவட்ட செயலாளரின் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் இவரது தந்தை இறந்துவிட, தாய் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் சரவணன் (25), கடந்த 3 மாதத்திற்கு முன்பு சிறுமி பள்ளிக்கு செல்லும்போது வழிமறித்து தன்னை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன சிறுமி தாயிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து அவர், சரவணனின் தந்தை தேனன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் முறையிட்டுள்ளார். அப்போது, ‘என் கணவர் இறந்து ஓராண்டுகூட ஆகவில்லை, அதற்குள் இப்படி ஒரு பிரச்னை என் குடும்பத்தில் உங்கள் மகனால் ஏற்படுகிறது. இதற்கு மேல் உங்கள் பையன் ஏதாவது தொல்லை கொடுத்தால் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம்’ என்று கூறி அழுதுள்ளார்.
அதற்கு சரவணன் குடும்பத்தினர் இனி எந்த தொல்லையும் வராது என வாய்மொழியாக உறுதி அளித்தார்களாம். இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடைபெற்ற உறவினர் காதணி விழா நிகழ்ச்சிக்கு சிறுமி தனது அண்ணனுடன் சென்றுள்ளார். அப்போது சிறுமியை வழிமறித்த சரவணன் கையைப் பிடித்து இழுத்து, ‘நீ என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் சும்மா விட மாட்டேன்’ எனக்கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தாயிடம் அவர் கூறியுள்ளார். அவர் மகளுக்கு ஆறுதல் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.
சிறிதுநேரம் கழித்து திரும்பி வந்தபோது சிறுமி சேலையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் மகளை மீட்டு செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தாய் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு தூண்டிய சரவணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது அக்கா சங்கீதா ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தவெக கிளை பொருளாளர் சரவணன், அவரது அக்காவும் விழுப்புரம் வடமேற்கு மாவட்ட த.வெ.க செயலாளர் குண.சரவணனின் மனைவி சங்கீதா (30) ஆகிய இருவர் மீதும் போக்சோ, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சங்கீதாவை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
The post காதலிக்க வற்புறுத்தி பாலியல் தொல்லை 8ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: தவெக நிர்வாகி போக்சோவில் கைது; மாவட்ட செயலாளர் மனைவிக்கு வலை appeared first on Dinakaran.