
ஐதராபாத்,
ஆந்திர மாநிலம் பியாரம்பள்ளியைச் சேர்ந்தவர் கவுதமி (வயது 24) இவர் மதனப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அழகு நிலையத்தை நடத்தி வருகிறார். இந்தநிலையில் மதனப்பள்ளி அம்மா செருவுமிட்டாவைச் சேர்ந்த கணேஷ் (வயது 25) என்பவர் கவுதமியை காதலித்து வந்தாக கூறப்படுகிறது. கணேசின் நடவடிக்கைகள் பிடிக்காததால் கவுதமி அவரை விட்டு விலகி சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே கவுதமிக்கும் பீலேருவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 27) என்ற இளைஞருக்கும் வரும் ஏப்ரல் மாதம் 29-ம் தேதி திருமணம் நடக்க உள்ளது.
இந்தநிலையில் கவுதமியை காதலித்து வந்த கணேஷ்க்கு இந்த விவகாரம் தெரிய வந்தது. இதனையடுத்து தனக்கு கிடைக்காத காதலி வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற ஆத்திரத்தில் அழகு நிலையத்திற்கு சென்ற கணேஷ் காதலி கவுதமியை கத்தியால் குத்தி உள்ளார். இதனையடுத்து மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அவர் முகத்தில் மீது வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் வலியால் அலறி துடித்துக்கொண்டிருந்த கவுதமியை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசார் உதவியுடன் மீட்டு மதனப்பள்ளி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளம்பெண் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடிய கணேசை குர்ரம்கொண்டா போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காதலர் தினத்தில் ஆந்திராவில் இளம்பெண் மீது முன்னாள் காதலன் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.