*சிசிடிவி பதிவை வைத்து போலீஸ் விசாரணை
காடையாம்பட்டி: காடையாம்பட்டி அருகே, முன்னாள் ராணுவ வீரரின் கார், டூவீலர்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து, போலீசார் சிசிடிவி பதிவை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே நடுப்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் மணி. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர். இவரது வீட்டினருகே அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ்(43) என்பவர் வசித்து வருகிறார்.
இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் ஏற்காட்டில் செக்யூரிட்டி அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில், ரமேஷ் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென சத்தம் கேட்டதால், வெளியே வந்து பார்த்த போது, வீட்டின் போர்ட்டிகோவில் நிறுத்தியிருந்த 2 டூவீலர்கள் மற்றும் கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், குடும்பத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால், தீயை அணைக்க முடியாததால், காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் 2 டூவீலர்கள் தீயில் முழுவதும் எரிந்து விட்டது. காரின் முன்பகுதி எரிந்து சேதமானது. மேலும், மின் ஒயர்கள் மற்றும் வீடு சேதமடைந்தது. இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில், தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நடுப்பட்டி முதல் உம்பிளிக்கம்பட்டி வரை உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, நள்ளிரவில் டூவீலர்கள் மற்றும் காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், அதில் சம்மந்தப்பட்ட நபர்கள் தீ வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக ரமேஷ் தெரிவித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காடையாம்பட்டி அருகே நள்ளிரவில் மாஜி ராணுவ வீரரின் கார், டூவீலர்கள் தீ வைத்து எரிப்பு appeared first on Dinakaran.