அண்ணா பல்கலை. மாணவி பாலியல் குற்றச்சாட்டு ஞானசேகரன் மீதான வழக்கில் இன்று காலை தீர்ப்பு: சென்னை மகளிர் நீதிமன்றம் பிறப்பிக்கிறது

1 day ago 3

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24ம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஞானசேகரனை கடந்த கைது செய்தனர். சைதாப்பேட்டை 9வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு கடந்த மார்ச் 7ம் தேதி மாற்றப்பட்டது.

இந்த நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும், தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ம் தேதி தள்ளுபடி செய்து அன்றைய தினமே குற்றச்சாட்டு பதிவு செய்தது. இதனையடுத்து சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்பு கடந்த ஏப்ரல் 23ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. தினந்தோறும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் காவல் துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

சுமார் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, குற்றஞ்சாட்டுகளை நிரூபிக்க அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உள்ளது என்று வாதிட்டார். குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரம் இல்லை எனவே வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கவுள்ளார். ஐந்து மாதங்களில் இந்த வழக்கு புலன் விசாரணை, சாட்சி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் குற்றச்சாட்டு ஞானசேகரன் மீதான வழக்கில் இன்று காலை தீர்ப்பு: சென்னை மகளிர் நீதிமன்றம் பிறப்பிக்கிறது appeared first on Dinakaran.

Read Entire Article