சென்னை: கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கோடையின் தாக்கம் தொடங்கியது. அந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் அதிகரிக்கத் தொடங்கியது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடந்த மார்ச் மாதம் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தத் தொடங்கியது. சில இடங்களில் 104 டிகிரி வரையும் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது. இது மே 28ம் தேதி வரை நீடித்தது.இந்த காலத்தில் வெயில் கொளுத்தும் என்று அச்சம் பொதுமக்களிடம் இருந்து வந்தநிலையில், கிழக்கு, மேற்கு திசை காற்றுகளின் காரணமாக பெய்யும் மழையால் வெப்பம் குறையும் என்றும், 104 டிகிரிக்கு மேல் வெப்பம் செல்ல வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
அதற்கேற்ப இந்த கோடை காலத்தில் வெப்பம் குறைந்து மழைக்காலமாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே, ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழையும் ஒரு வாரம் முன்னதாக தொடங்கியுள்ளதால், தமிழகத்திலும் அந்த மழை பரவலாகவும் பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்றுடன் அக்னி நட்சத்திரம் விடை பெற்றது. அதனால் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாமல் முடிந்துள்ளது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாகவும் படிப்படியாக வெப்பம் குறையத் தொடங்கும் வாய்ப்புள்ளது.
The post விடை பெற்றது அக்னி நட்சத்திரம் appeared first on Dinakaran.