காஞ்சிபுரம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (21.05.2025) காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், மேவளூர்குப்பம், அருள்மிகு வள்ளீஸ்வரர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து, 2,00,001-வது ஏக்கர் நில அளவீடு செய்யும் பணியினை தொடங்கி வைத்து, எல்லை கற்களை நட்டு வைத்தனர்.
இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல், திருக்கோயில் நிலங்களை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.
இந்த அரசு பொறுப்பேற்றபின் திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கும் பணிகள் மற்றும் திருக்கோயில் நிலங்களை அளவீடு செய்து பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்ள வருவாய் துறையின் மூலம் 40 தனி வட்டாட்சியர்கள், 172 உரிமம் பெற்ற நில அளவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இப்பணிகளை துரிதப்படுத்திடும் வகையில் ரூ.1.89 கோடி செலவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 36 ரோவர் (DGPS – Rover) கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு, அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கடந்த 08.09.2021 அன்று சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் வளாகத்தில் ரோவர் கருவியின் மூலம் முதன் முதலாக நில அளவை செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார். நில அளவை செய்யப்பட்ட இடங்களில் “HRCE” என்ற எழுத்துக்களுடன் கூடிய எல்லைக் கற்கள் நடப்பட்டு, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 01.06.2022 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புலிவனம், அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 50,001 ஏக்கர் அளவீடு செய்யும் பணியும், 25.01.2023 அன்று திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1,00,001-வது ஏக்கர் நில அளவீடு செய்யும் பணியும், 14.09.2023 அன்று தருமபுரி மாவட்டம், கோபாலம்பட்டி, அருள்மிகு பேட்ராய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 1,50,001-வது ஏக்கரை நில அளவீடு செய்யும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன்மூலம் கடந்த நான்காண்டுகளில் திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கும் பணிகளும், தனிநபர் பெயரிலும், கணினி சிட்டாவிலும் தவறுதலாக பதிவான பட்டா மாறுதல்களை சரிசெய்து திருக்கோயில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யும் பணிகளும் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒட்டு மொத்தமாக கடந்த 07.05.2021 முதல் இதுவரை 971 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.7671.23 கோடி மதிப்பீட்டிலான 7560.05 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 2 இலட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, 1,22,291 எல்லை கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும், UDR தவறுகள் குறித்து மேல்முறையீடு செய்து 5,409.87 ஏக்கர் நிலங்களும், கணினி சிட்டாவில் தவறுகள் சரிசெய்யப்பட்டு 4,491,47 ஏக்கர் நிலங்களும் திருக்கோயில்கள் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், மேவளூர்குப்பம், அருள்மிகு வள்ளீஸ்வரர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலத்தில் 2,00,001-வது ஏக்கர் நில அளவீடு செய்யும் பணியினை தொடங்கி வைத்து, எல்லைக் கற்களை நட்டு வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, திருபெரும்புதூர் சார் ஆட்சியர் மிருணாளினி, தனி அலுவலர்கள் (ஆலய நிர்வாகம்) தி.சுப்பையா, பி.பூங்கொடி, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் சி.குமாரதுரை, துணை ஆணையர்கள் எம்.ஜெயா, கே.சித்ராதேவி, உதவி ஆணையர் ஆர்.கார்த்திகேயன், திருப்பெரும்புதூர் ஒன்றிய குழுத் தலைவர் எஸ்.டி.கருணாநிதி, அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் அறங்காவலர் ந.கோபால், அருள்மிகு வள்ளீஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் மு.பாலாஜி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post காஞ்சியில் கோயில் நில அளவீடு செய்யும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர்கள் appeared first on Dinakaran.