காஞ்சிபுரம் அரசு பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து மின்விசிறி, மின்விளக்கு, கடிகாரம் எழுதுபலகை, இருக்கைகள் உடைப்பு: மர்மகும்பலுக்கு போலீஸ் வலை

1 month ago 4

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து மின்விசிறி, மின்விளக்குகள், கடிகாரம், எழுது பலகை, இருக்கைகளை சேதப்படுத்திவிட்டு தப்பிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தும்பவனம் தெருவில் ஏகேடி மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளியில் உள்ள வகுப்பறைகள் சேதமடைந்ததால் மறு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால், பள்ளி அருகில் செயல்படும் உயர்நிலைப்பள்ளியில் தற்காலிமாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வரும் நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் பள்ளிக்கு வாரவிடுப்பு விடப்பட்டது.

இதை சாதகமாக பயன்படுத்திய சமூக விரோதிகள் இரவோடு இரவாக பள்ளிக்குள் புகுந்து வகுப்பறையில் உள்ள மின்விசிறி, மின்விளக்குகள், கடிகாரம், எழுத்து பலகைகள், இருக்கைகள் போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளனர். விடுப்பு முடிந்து நேற்று வழக்கம்போல் வந்தபோது பள்ளிவகுப்பறைகள் திறந்து இருந்ததை பார்த்து ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர். சமூகவிரோதிகள் பள்ளி அருகில் உள்ள கோயில் சுவற்றில் ஏறி பள்ளிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்திவிட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் காஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் எதற்காக வகுப்பறைக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தினார்கள்? போதையில் செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

The post காஞ்சிபுரம் அரசு பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து மின்விசிறி, மின்விளக்கு, கடிகாரம் எழுதுபலகை, இருக்கைகள் உடைப்பு: மர்மகும்பலுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Read Entire Article