காஞ்சிபுரத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் 625 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

3 months ago 17

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன், மாநில செயலாளர் முத்துக்குமார் மீதும் செய்யப்பட்டுள்ளது. சவுந்தரராஜன், முத்துக்குமார், சாம்சங் தொழிலாளர்கள் என மொத்தம் 625 பேர் மீது செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது. குறிப்பாக ஊதியத்தை உயர்த்தி வழங்கிட, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்திட, 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைத்திட உள்ளிட்ட நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. ஆனாலும் ஒரு மாதமாக தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சாம்சங் நிறுவனம், தமிழக அரசுடன் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில், 14 அம்ச கோரிக்கைகளுடன் உடன்பாடு ஏற்பட்டு ஒரு தரப்பு தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆனால் சிஐடியு தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து இன்று காலை போராட்டக் களத்தில் கூடிய சாம்சங் தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் ஈடுபட்டனர். இந்நிலையில் கொட்டும் மழையிலும் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், சி.ஐ.டி.யு தலைவர் சௌந்தரராஜன் உள்பட போராட்டக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் 625 பேர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன், மாநில செயலாளர் முத்துக்குமார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். தடையை மீறி குவிந்தது, உள்பட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் 625 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article