காசாவில் இருந்து நிரந்தரமாக பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்: அமெரிக்கா

3 hours ago 1

வாஷிங்டன்,

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடிக்கிறது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்த இந்த போரில் காசாவில் மட்டும் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். அதே சமயம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மாதம் அமலுக்கு வந்தது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்பு இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசிய பிறகு டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் , காசாவை அமெரிக்கா கையகப்படுத்தி சொந்தமாக்கிக்கொள்ளும் என அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், பாலஸ்தீனியர்கள் அருகில் உள்ள எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட பிற மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று பாதுகாப்பாகவும், அமைதியாகவும் வாழலாம் என்றும் டிரம்ப் கூறினார்.

டிரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்த நிலையில், டிரம்பின் அறிவிப்பு தொடர்பாக பேசிய வெள்ளை மாளிகை அதிகாரிகள், பாலஸ்தீனியர்களை தற்காலிமாக வேறு இடம் மற்றுவதாக மட்டுமே டிரம்ப் கூறியதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், " 15 மாதங்களாக நடைபெற்ற போரினால் ஏற்பட்ட பாதிக்கப்பட்டுள்ள காசாவை மறுகட்டமைக்கும் வரை, இடைக்கலாமாக மக்கள் வேறு இடத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்" என்று கூறியுள்ளனர். இதன் மூலம் பாலஸ்தீனியர்கள்  நிரந்தரமாக வெளியேற்றப்படமாட்டார்கள் என அமெரிக்கா தற்போது விளக்கம் அளித்து இருக்கிறது. எனினும் டிரம்ப் இது தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Read Entire Article