
சண்டிகர்,
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக மத்திய அரசு முக்கிய ஆலோசனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலை தொடங்கியது. இந்தியாவை நோக்கி வந்த ஏவுகணை மற்றும் டிரோன்களை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு தகர்த்து எறிந்தது. இதனைத்தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இதன்படி இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையோர மாநிலங்களில் கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவில் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளநிலையில், இந்திய ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்து பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பெண்கள், இளைஞர்கள் என பலர் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
முன்னதாக சண்டிகர் துணை ஆணையர் நிஷாந்த் குமார் என்பவர் நேற்று இரவு தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "18 வயதுக்கு மேற்பட்டோர் தன்னார்வலர்களாக சிவில் பாதுகாப்பு படையில் சேருமாறும், ஆர்வமுள்ளவர்கள் நாளை (அதாவது இன்று) காலை 10 மணிக்கு தாகூர் தியேட்டருக்கு வரலாம்" என்றும் பதிவிட்டிருந்தார்.
அதன்படி, காலையிலேயே குவிந்த இளைஞர் தன்னார்வலர் படையினர், "பாகிஸ்தான் அழிய வேண்டும்.. இந்திய ராணுவத்துக்கு உதவத் தயார்" என கோஷமிட்டனர்.
அவசரகால சைரன் எச்சரிக்கைகள், மின் தடைகள் மற்றும் தேவைப்பட்டால் மக்களை வெளியேற்றும் செயல்முறை வழிகாட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் தன்னார்வலர்களுக்கு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சண்டிகரைச் சேர்ந்த முஸ்கன் கூறுகையில், "நாங்கள் நமது ராணுவத்தை ஆதரிக்க இங்கே இருக்கிறோம். அவர்கள் நமக்காக நிறைய செய்கிறார்கள், மேலும் நாங்கள் எங்கள் ராணுவத்திற்காக ஏதாவது செய்ய விரும்புகிறோம்." என்று தெரிவித்தார்.
உள்ளூர்வாசியான கரண் சோப்ரா கூறுகையில், "இந்தியாவுக்காக என் உயிரைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். நாங்கள் படிவத்தை தாக்கல் செய்துவிட்டோம்; எங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்..." என்று தெரிவித்தார்.