சென்னை: காகிதம் தயாரிக்க பயன்படும் மூல பொருட்கள் இறக்குமதிக்கு விதிக்கும் சுங்க வரியை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு காகித ஆலைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தென்னிந்திய காகித ஆலைகளின் கூட்டமைப்பு செயலாளர் நந்திகேஸ்வரன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: கழிவு காகிதத்துக்கான சுங்க வரிக் குறைப்புக்கு தொழில்துறையினர் போராடி வருகின்றனர். காகிதம் தயாரிக்கும் மூல பொருட்கள் இறக்குமதி செய்ய சுங்க வரி பூஜ்ஜியமாக இருந்தது, அது 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் பல தொழிற்சாலை பாதிக்கப்பட்டது. காகித மூல பொருட்கள் இறக்குமதிக்கு விதிக்கும் சுங்க வரியை குறைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலையில் காகிதம் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதற்கு சுங்க வரி பூஜ்ஜியமாக உள்ளது. சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து காகித இறக்குமதிக்கான சுங்க வரியை தற்போதைய நிலையில் இருந்து 25 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். தற்போது கிட்டத்தட்ட 5 சதவீத அளவு மட்டுமே காகிதத்தை ஏற்றுமதி செய்கிறோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் அது அதிகரிக்கும். சுங்க வரி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக நடுத்தர அளவிலான ஆலைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமாக கிட்டத்தட்ட 400 ஆலைகள் மூடப்பட்டு உள்ளன. மேலும் பல மூடப்படும் விளிம்பில் உள்ளன. நடுத்தர ஆலைகள் மிகக் குறைந்த லாபத்தில் இயங்குகின்றன. எனவே, கழிவுகளை இறக்குமதி செய்வதற்கான சுங்க வரியை குறைக்க வேண்டும். மேலும் தனியார் வணிகஸ்தர்கள் கொள்முதல் செய்யும் காகிதத்தை அரசு கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
The post காகித மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு விதிக்கும் வரியை குறைக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு காகித ஆலைகள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.