கவலையைத் தீர்க்கும் கன்னியாகுமரி

6 hours ago 1

நீங்கள் ஒரு சுற்றுலாப் பயணியாகச் சென்றாலும் சரி, அல்லது ஒரு யாத்ரிகனாக, தெய்வதரிசனம் செய்ய விரும்பும் பக்தனாகச் சென்றாலும் சரி, கன்னியாகுமரி உங்கள் மனதை கட்டாயம் ஈர்த்துவிடவே செய்யும். நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம்செய்யும் குமரி அன்னை, தன் கோல விழிப்பார்வையால் பார்க்கும் போது ஏற்படும் பரவசம் இருக்கிறதே, அதை அனுபவித்துத் தான் அறிய வேண்டும். பாரதத்தின் தென்கோடிமுனை இது. சுவாமி விவேகானந்தரும் அண்ணல் காந்தியடிகளும் மிகவும் விரும்பிய இடம்.மூன்று கடல்களும் ஒன்றுகூடி சங்கமமாகும் மிகப் புனிதமான திருத்தலம் கன்னியாகுமரி. இத்தலத்தில் அன்னையை பகவதி என்றும் கன்னி என்றும் பலவாறு போற்றி
வழிபடுகிறார்கள்.காசிக்கு அடுத்தபடியாக ராமேஸ்வரத்திலும் கன்னியாகுமரியிலும் கடலில் நீராடுவதை பெரும் பேறாக பாரத மக்கள் கருதுகின்றனர். நாகர்கோவிலில் இருந்தும் திருவனந்தபுரத்திலிருந்தும் பேருந்துகள் அதிகம் உண்டு. நாகர்கோவிலிருந்து 20 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 90 கிமீ தொலைவிலும், மதுரையிலிருந்து 240 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமரி அமைந்துள்ளது. பேருந்தில் இருந்து இறங்கியவுடன், நேராக ஒரு வழி படகுத்துறைக்கும், இன்னொரு பாதை குமரி அன்னையின் திருக் கோயிலுக்கும் இட்டுச்செல்லும். முதலில் நாம் படகுத்துறைக்குச் செல்வோம்.

காரணம் கன்னியாகுமரி ஆலயம் முதலில் கடல் நடுவே உள்ள பாதபாறை என்கின்ற பாறையின் மேல் இருந்ததாகவும், காலவெள்ளத்தில் கடலில் ஏற்பட்ட அரிப்பினால் அக்கோயில் கைவிடப்பட்டு புதிய கோயில் கடற்கரையில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர்.இந்த பாத பாறைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதுதான் விவேகானந்தர் மண்டபம். காந்தியடிகள் 1925 ஆம் ஆண்டு இங்கே வந்து இருந்த தன் அனுபவத்தை கன்னியாகுமரி தரிசனம் என்ற கட்டுரையில் மிக அழகாக விவரிக்கிறார்.‘‘வீணையின் இசை போன்று கன்னியாகுமரி கடல் அலைகளின் இனிமையான ஓசை, யாருக்குமே தியானம் புரியும் மனநிலையை அளிக்கவல்லது. இங்கு என் ஆன்மிக உணர்வுகள் வலுவடைந்து உள்ளன. இங்கு உட்கார்ந்து கீதையைப் படித்துக் கொண்டே இருக்கவும் என் உள்ளம் விரும்பியது’’ என்று காந்தியடிகள் தன் கன்னியாகுமரி அனுபவத்தைப் பதிவு செய்கிறார்.விவேகானந்தர் தவம்புரிந்த இடத்தில் சலவைக் கல்லினால் ஆன ஒரு நினைவுமண்டபம் எழிலுடன் கட்டப்பட்டிருக்கிறது.

குமரிஅன்னையின் திருப்பாதம் இருக்கின்ற பாத மண்டபம் மூன்று பிராகாரங்களுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. மேலே ஏகதள விமானம். உள்பிராகாரத்தில் 28 சித்திரத்தூண்கள் உள்ளன. அவைகளின் மேலே விதானம் தாங்கி நிற்கிறது. மண்டபத்தின் பின்னால் ஒரு கொடிக்கம்பம் உள்ளது. முக்கோண வடிவில் ஓம் என்று பொரித்த காவி வண்ணக்கொடி காலை சூரிய உதய காலத்தில் ஏற்றப்பட்டு, மாலை சூரிய அஸ்தமன காலத்தில் இறக்கப்படுகிறது.விவேகானந்தர் பாறையில் பாத மண்டபத்தைத் தவிர, சபா மண்டபமும், தியானமண்டபமும் நல்ல முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.தியான மண்டபத்தில் சென்று அமர்ந்தால், ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. நமக்கு விருப்பமான கடவுளை நினைத்து கொஞ்ச நேரம் அமைதியாக அங்கே தியானம் செய்யலாம்.திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக்கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறைமீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும்.

இந்த சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6ல் தொடங்கப்பட்டு 2000, ஜனவரி 1ல் திறக்கப்பட்டது. மிகவும் நுட்பமான வேலைப்பாடுகளுடன் அமைந்த திருவள்ளுவர் சிலையைப் பார்க்கச் செல்ல படகு வசதி உண்டு.இனி மறுபடி படகில் ஏறி கரையை அடைந்து பகவதி அம்மன் கோயிலை அடையலாம். தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் இது தேவியின் முதுகுப் பகுதி விழுந்த சக்தி பீடமாகவும் கருதப்படுகிறது.அதற்கு முன் மூன்று கடல்களும் ஒன்று கூடும் சங்கமத் துறை இருக்கிறது. கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமமான, அங்கு விருப்பம் இருப்பின் நீராடலாம். அல்லது தலையில் தண்ணீர் தெளித்துக்கொண்டு பகவதி அம்மனின் பிரதான வாசல் வழியாக உள்ளே செல்லலாம்.

கோயில் கொஞ்சம் நெருக்கடியாகத்தான்தான் இருக்கிறது. கோயிலைச் சுற்றி கடைகளின் நெரிசல் சுற்றுலாப் பயணிகளின் நெரிசல் என கூட்டம் தள்ளுகிறது.சுற்றுலாத் தலமான இங்கு இந்த நெரிசல் தவிர்க்க முடியாதது தான்.திருமணமாகாத கன்னியாக அன்னை பராசக்தி ஏன் இங்கே தவம் செய்கிறாள்?பாணாசுரன் என்ற அசுரனை அழிக்க பார்வதிதேவி இங்கே குமரியாக அவதரிக்கிறாள். கன்னியான அவள் அழகில் மோகம் கொண்ட அசுரன் அவளை நெருங்கவே போரிட்டு அவனை அழிக்கிறாள்.இப்பொழுதும் இந்த சம்பவம் பள்ளிவேட்டை என்ற நாட்டுக் கூத்தாக நவராத்திரி சமயத்தில் நடைபெற்றுவருகிறது.

நவராத்திரி விழா இங்கே வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தினசரி அன்னையின் வீதிஉலா காட்சிகள் நம்மைப் பரவசப்படுத்தும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில், சர்வ அலங்கார பூஷிதையாக அன்னை வீதிவலம் வருகிறாள்.புரட்டாசி நவராத்திரி விழா போலவே வைகாசி விசாகத்திலும் பத்து நாள் திருவிழா நடக்கிறது. அப்போது தேரோட்டமும் தெப்ப உற்சவமும் வெகு பிரசித்தம்.தேவியின் சந்நதி கடலை நோக்கி கிழக்குமுகமாக அமைந்துள்ளபோதிலும் அதன் பிரதான வாயில்கள் ஆண்டில் 5 முறை மட்டுமே திறக்கப்படுகிறது என்கிறார்கள்.

தேவியின் முகத்தில் ஜொலிக்கும் பிரகாசம் வெகு அற்புதம். இந்த பிரகாசத்தில் அந்த காலத்தில் தொலைதூரக் கப்பல்கள் திசை தடுமாறி கரையில் மோதினவாம்.அதனால் தான் கீழ்வாசல் நிரந்தரமாக மூடிவைக்கப்பட்டது என்கிறார்கள்.இனி உள்ளே சென்று அன்னையை தரிசிப்போம். புன்சிரிப்போடு விளங்கும் தோற்றம். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். வலது திருக்கரத்தில் இலுப்பைபூமாலை. இடது கை தொடையின்மீது வைத்து தவக்கோலத்தில் காட்சி தருகிறாள்.அன்னையின் திருமுடிமீது விளங்கும் கிரீடத்தில் பிறைமதி சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. அன்னையின் எழில் முகத்தை தரிசித்துவிட்டு வெளியே பிராகாரகங்களுக்கு வருவோம். உள் பிராகாரத்தின் தென்மேற்கு கோடியில் ஒரு விநாயகர் சந்நதி உள்ளது. ஆறு தூண்களால் அமைக்கப்பட்ட மணிமண்டபம் ஒன்றும் உள்ளது. அதன் முன்னே உள்ள மண்டபத்தை சபா மண்டபம் என்று சொல்கிறார்கள்.

இந்த உள் பிராகாரத்தை விட்டு வெளியே வந்தால் கொஞ்சம் விசாலமான வெளிப் பிராகாரம்.அன்னை பகவதி நாள்தோறும் இந்த பிராகாரத்தை வலம் வருவது கண்கொள்ளாக் காட்சி. ஊஞ்சல் மண்டபம் ஒன்றும் இந்தப் பிராகாரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.திருமணமாகாத பெண்கள், திருமணத்தடை உள்ளவர்கள், ஜாதக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு நடைபெறும் கன்னிகா பூஜையிலும் சுயம்வர பூஜையிலும் கலந்துகொண்டு அன்னையின் அருளைப் பெறலாம்.எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் நம்முடைய பார்வையைப் பக்கத்தில் உள்ள காந்திமண்டபம் இழுக்கும்.மகாத்மா காந்தியின் அஸ்தி 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் குமரிமுனையில் கரைக்கப்பட்டது. அதன் நினைவாக மகாத்மாகாந்தி இந்தக் கன்னியாகுமரிமீது கொண்டிருந்த விருப்பத்தினால் நினைவுமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி சூரியனின் கிரணங்கள் அஸ்திக் கலசம் மேடையின் மீது விழும் வண்ணம் இம்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. பக்கத்திலேயே காமராஜருக்கும் மணிமண்டபம் உள்ளது.கன்னியாகுமரியின் இன்னொரு முக்கியமான அம்சம் காலையிலும் மாலையிலும் கடலில் ஏற்படும் சூரியஉதய அஸ்தமனக் காட்சிகள். அதுவும் பௌர்ணமியில் இந்தக் காட்சி வெகு விசேஷம்.அங்கே இரண்டு நிலாக்கள் பிரகாசித்துக்கொண்டிருக்கும். வானில் வான்நிலா பிரகாசிக்க, மண்ணில் நாம் நல்லவண்ணம் வாழ, பகவதி அம்மனின் அருள்நிலா முகமும் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.அந்த வான் நிலாவே இந்தநிலாவின் ஒளியில்தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ரம்மியமான இந்த நிகழ்ச்சியைக் காணவாவது கன்னியாகுமரிக்கு ஒருமுறை செல்ல வேண்டும். அந்தக் காட்சியும் அன்னையின் கருணையும் நம் கவலையைத் தீர்க்கும்.

 

The post கவலையைத் தீர்க்கும் கன்னியாகுமரி appeared first on Dinakaran.

Read Entire Article