கவர்னரின் கார் செல்லும்போது சாலையோரம் நின்றவரை சரமாரியாக தாக்கிய போக்குவரத்து காவலர்

3 hours ago 2

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள ஆனந்த் நகர் பகுதியில், கவர்னரின் கார் சென்று கொண்டிருந்தது. கவர்னரின் காருக்கு முன்னும், பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. இதனை முன்னிட்டு அந்த சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது சாலையோரமாக ஒரு நபர் நின்றுகொண்டிருந்தார். அந்த நபர் சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை கண்டு அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர், வேகமாக ஓடிச்சென்று அந்த நபரின் சட்டையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளினார்.

கீழே விழுந்த நபர் எழுந்து அங்கிருந்து நடந்து சென்றார். அப்போது போக்குவரத்து காவலர் அந்த நபரை எட்டி உதைத்து, கண்ணத்தில் அறைந்தார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம்பிடித்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இது குறித்து கூடுதல் டி.சி.பி. விக்ரம் ரகுவன்ஷி கூறுகையில், கவர்னருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழக்கப்பட்டுள்ளதால், அவரது காருக்கு அருகே செல்ல வேண்டாம் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டதாகவும், அதை மீறி அந்த நபர் கவர்னரின் காருக்கு அருகே சென்றதாகவும் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம், சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்த நபர் மீது போக்குவரத்து காவலர் இவ்வளவு கடுமையாக தாக்குதல் நடத்தலாமா? இதற்கு சட்டத்தில் அனுமதி உள்ளதா? கவர்னரின் பாதுகாப்பு முக்கியம் என்றால் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தாதது ஏன்? என்று சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Read Entire Article