சென்னை,
தமிழகக் காவல்துறையின் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த மகேஷ்குமார் அகர்வால் மத்திய அரசுப் பணிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசுப் பணிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகக் காவல்துறையின் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த மகேஷ்குமார் அகர்வால் எல்லைப் பாதுகாப்புப் படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதல் டிஜிபியாக 4 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபியாக பணியாற்றிய இவர். கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு ஆயுதப்படை ஏடிஜிபியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் அகர்வால் 1972 ஆம் ஆண்டு பிறந்தவர். தமது தந்தையைப் போலவே சட்டம் படித்துவிட்டு, காவல்துறை பணியில் சேர்ந்தார். 1994 -ம் ஆண்டு தனது 22 வயதில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தமிழ்நாட்டில் தேனி எஸ்.பியாகவும், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாகவும் பணியாற்றினார். 2001 -ம் ஆண்டு சென்னை பூக்கடை துணை கமிஷனர், போக்குவரத்து துணை கமிஷனர் பதவிகளை வகித்தார். அதைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரியாக 10 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.