சென்னை,
நடிகர் விஷால் சில நாள்களுக்கு முன் மத கஜ ராஜா படத்தின் புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போது, அவரால் சரியாக மைக் பிடிக்க முடியாத அளவிற்கு கை நடுங்கிக்கொண்டே இருந்தது.மேலும், பேசும்போதும் அமர்ந்திருந்தபோதும் விஷால் கண்ணீர் விட்டபடி இருந்தார். இதைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தனக்கு ஒன்றும் ஆகவில்லை என விஷால் தெரிவித்ததுடன் வைரல் காய்ச்சலால்தான் இப்படியானது என்றார். இதற்கிடையே, சமூக வலைதளங்களில் பலரும் விஷால் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் 'அவன் இவன்' படத்தில் நடித்ததுதான் என கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், வணங்கான் படத்தின் வெற்றிவிழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பாலாவிடம், " நடிகர் விஷால் அவன் இவன் படத்தில் நடித்ததால்தான் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது என சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாலா, "என்ன பதில் சொல்வது? அதற்கு மருத்துவ சான்றிதழ் ஏதாவது வாங்கிக்கொடுக்கலாமா? யாரோ சொன்னார்கள் நான் விஷாலின் கண்களை சேர்த்து தைய்த்துவிட்டேன் என. அதெப்படி முடியும்? யாருக்கு என்ன தோன்றுகிறதோ அதை பேசுகிறார்கள். இதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை.
என்னை எல்லோரும் கோபக்காரன் என்றும், என்னிடம் பயப்படுகிறார்கள் என்றும் சொல்கிறீர்கள். அப்படி இதுவரை எங்காவது நடந்திருக்கிறதா? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அருண்விஜய், இதற்கு முன் நடித்த, என்னுடன் பணியாற்றியவர்களிடம் கூட கேட்டுப் பாருங்கள்." எனக் கூறினார்.
விஷாலுக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதற்கு 'அவன் இவன்' படத்தில் நான் அவரது கண் பார்வை குறைபாடான கதாபாத்திரத்தை கொடுத்தது தான் என ஒரு சிலர் குற்றம் சாட்டி பேசி வருகிறார்கள்.