கவரப்பேட்டை ரயில் விபத்து 44 மணி நேர போராட்டத்திற்கு பின் இயல்புநிலை திரும்பியது

3 months ago 17

சென்னை: சென்னை அருகே கவரப்பேட்டை ரயில் நிலைய விபத்தில் சிக்கி தடம்புரண்ட பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் இரவு பகலாக நடந்து முடிந்தது. விபத்து நடந்த 44 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விபத்துக்குள்ளான ரயிலின் இன்ஜின் அகற்றப்பட்டு, சேதமடைந்த லூப்லைனும் சீரமைக்கப்பட்டது.

இதனால் இந்த வழித்தடத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி, மீண்டும் ரயில்கள் ஓடத் துவங்கின.கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கடந்த 10ம் தேதி காலை 22 பெட்டிகளில் 1600 பயணிகளுடன் பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை பகுதியில் வந்தபோது சிக்னல் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது படுவேகமாக மோதியது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டு சேதமடைந்தன. முதல் 3 பெட்டிகள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

இவ்விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற பயணிகள் லேசான காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில், கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் மீட்பு குழுவினர் சேதமடைந்த ரயில் பெட்டிகளை நேற்று முன்தினம் மாலை 5.25 மணிக்கு அகற்றத் தொடங்கினர். தொடர்ந்து, தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு ரயில்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அன்று இரவு 9 மணியளவில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு 10 கிமீ வேகத்தில் ரயில் சென்றது. மேலும், தண்டவாளங்களில் சிதறிக்கிடந்த பெட்டிகள் அகற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் விபத்து நடந்த பாக்மதி ரயில் இன்ஜினை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், விபத்து நடந்த பகுதியில் உடைந்த 2வது லூப்லைன் தண்டவாளங்களையும் ஊழியர்கள் சீரமைத்தனர்.

இதனையடுத்து, நேற்று காலை 11 மணி முதல் கும்மிடிப்பூண்டி முதல் கவரப்பேட்டை வழியாக சென்னை சென்ட்ரலுக்கும், சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டைக்கும் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் 10 கிமீ வேகத்தில் மட்டுமே கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், 44 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்று விபத்து ஏற்பட்ட பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் அகற்றப்பட்டது. பின்னர், ஊழியர்கள் இன்ஜினை சீரமைத்து ராயபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனிடையே கவரப்பேட்டையில் ரயில் இன்ஜின் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபடும் போது திடீர் திடீரென மழை பெய்தது. இதனால் இன்ஜின் அகற்றும் பணிகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர், மழை நின்றதும் மீண்டும் பணிகள் தொடங்கி நடந்தன.

5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

கவரப்பேட்டை ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. கவரப்பேட்டை ரயில் நிலைய மேலாளர் முனிபிரசாத் பாபு கொடுத்த புகாரின்பேரில் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ‘‘இரவு 8.29 மணிக்கு ரயில் எண் 12578 பாக்மதி எக்ஸ்பிரஸ், கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது. பலத்த சத்தத்துடன் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், கிரண்குமார் என்ற ரயில்வே ஊழியர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டார்.

அவர் அங்கு சென்று பார்த்தபோது 7க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக தகவல் தெரிவித்தார். புகார் சரியாக உள்ளதா எனப் புகார்தாரரிடம் கேட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தகவல் அறிக்கையில், பிரிவு 281 (வேகமாகவும், கவனக்குறைவாகவும் செயல்படுதல்), பிரிவு 125 பி (கடுமையான காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல்), ரயில்வே சட்டம் 281 (ரயில் பயணிகளுக்கு ஆபத்தான வகையில் செயல்படுதல் மற்றும் வேகமாக செயல்படுதல்) ஆகிய 5 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரை தொடர்ந்து கொருக்குப்பேட்டை ஆய்வாளர் சசிகலா, விசாரணையை தொடங்கி உள்ளார். விபத்துக்கு சிக்னல் கோளாறு காரணமா, மெயின் லைனில் செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் லூப் லைனில் சென்றது எப்படி சென்றது? நாச வேலை காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post கவரப்பேட்டை ரயில் விபத்து 44 மணி நேர போராட்டத்திற்கு பின் இயல்புநிலை திரும்பியது appeared first on Dinakaran.

Read Entire Article