
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், மதுரையை அடுத்த கள்ளழகர் கோவிலில் நேற்று மாலையில் சித்திரை திருவிழா தொடங்கியது. இன்று மாலை சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாளையில், நாளை(சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி மதுரை நோக்கி புறப்படுகிறார்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக தங்கக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்து 12-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.45 மணிக்கு மேல் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வார்கள்.
இந்நிலையில், கள்ளழகர் புறப்பாடு நிகழ்வை முன்னிட்டு மதுரை புறநகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"கள்ளழகர் புறப்பாடு நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) மதுரையில் இருந்து அழகர்கோவில் சாலை வழியாக மேலூர் செல்லும் அனைத்து வாகனங்களும் கள்ளந்திரி, லட்சுமிபுரம், மாங்குளம், கிடாரிப்பட்டி வழியாக மேலூர் செல்ல வேண்டும். இதுபோல், மேலூர்-அழகர்கோவில் சாலை வழியாக மதுரை செல்லும் அனைத்து வாகனங்களும் மரக்காயர்புரம் சந்திப்பில் இருந்து, நாயக்கன்பட்டி வழியாக மதுரை செல்ல வேண்டும்.
மதுரையில் இருந்து அழகர்கோவில் நோக்கி கடச்சனேந்தல் மற்றும் அப்பன்திருப்பதி வழியாக வரும் அனைத்து வாகனங்களும் நாளை, மதுரை-அழகர்கோவில் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
அம்புவிடும் மண்டபம் பகுதியில் இரு சக்கர வாகனங்களையும், பாலாஜி அவன்யூ பகுதியில் தற்காலிக பஸ் நிறுத்தமும் செயல்படும். இதுபோல், நான்கு சக்கர வாகனங்களை கேரளா நீட் அகாடமி, மாங்காய் தோட்டம், மா.சத்திரப்பட்டி சந்திப்பு-காயில் கம்பெனி, பொய்கைக்கரைப்பட்டி தெப்பம் ஆகிய பகுதிகளில் நிறுத்த வேண்டும். மேலூரில் இருந்து அழகர்கோவில் நோக்கி வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும், நாளை ஐஸ்வர்யா கார்டன், முத்துலட்சுமி ரைஸ்மில் பார்க்கிங், பிரகாஷ் அய்யர் கார்டன், அம்மன் மகால் ஆகிய இடங்களில் நிறுத்த வேண்டும்.
கோட்டை இரண்டாவது நுழைவு வாயில் தற்காலிக பஸ் நிறுத்துமிடமாக செயல்படும். மேலூரில் இருந்து அழகர்கோவில் வரும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் மதியம் ஒரு மணி வரை அழகர்கோவில் வளாகம் வரை வந்து செல்லலாம். அதன்பின்னர் அனுமதி இல்லை.
மதுரையில் இருந்து கடச்சனேந்தல் வழியாக அழகர்கோவில் ரோடு, மேலூரில் இருந்து கிடாரிப்பட்டி வழியாக அழகர்கோவில் செல்லும் சாலை மற்றும் மதுரை-நத்தம் சாலையில் இருந்து சீகுபட்டி சந்திப்பு வழியாக அழகர்கோவில் செல்லும் சாலை ஆகிய வழித்தடங்களில் நாளை காலை முதல் எவ்வித கனரக வாகனங்களுக்கும் அனுமதி இல்லை."
இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.