கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

1 month ago 4

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம், தீர்ப்பளித்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 66 பலியாகினர். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு, தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீதரன், பாஜக வழக்கறிஞர் அ.மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அதிமுக வழக்கறிஞர் மாநில செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் ஆஜராகி, 2023ம் ஆண்டில் மரக்காணத்தில் இதேபோல, விஷச் சாராயம் குடித்து 30 பேர் பலியானர். அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வும், மக்களும், காவல் துறையிடம் புகார் அளித்தனர். எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டனர்.

வழக்கறிஞர் கே.பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, ஆண்டுதோறும் இதுபோல் தொடர்வதால், அரிதான வழக்காக கருதி இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அல்லது சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று வாதிட்டார். இந்த வாதங்களுக்கு பதிலளித்து தமிழக அரசுத்தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க ஆலோசனைகள் வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில், சிபிஐக்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள், நேற்று காலை தீர்ப்பளித்தனர். தீர்ப்பில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்படுகிறது. சம்மந்தப்பட்ட எஸ்.பி வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஜயிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கில் எஸ்.சி, எஸ்.டி சட்டப்பிரிவையும் சேர்க்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

* தீர்ப்பு விபரம்: விஷ சாராய மரணங்களை தொடர்ந்து காவல் கண்காணிப்பாளரின் பணியிடை நீக்கம் ரத்து செய்வதற்கு உரிய காரணங்களை அரசு விளக்கவில்லை. இந்த வழக்குகளில் மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால், அவர்கள் தங்கள் வழக்குக்கு தாங்களே நீதிபதியாக இருக்க முடியாது. விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் கூட வழக்கின் விசாரணையை மாற்றலாம். எனவே, இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுகிறது.

இரண்டு வாரங்களில் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்குகளை விரைந்து விசாரித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு மாநில போலீசார் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீதிபதி பி.பி.பாலாஜி தனியாக அளித்த தீர்ப்பில், காவல் நிலையத்தில் இருந்து கல்லெறியும் தூரத்தில் நடந்த கள்ளச்சாராயம் விற்பனையை காவல்துறையினர் எப்படி கவனிக்காமல் இருந்தனர்? பொதுமக்களை சமாதானப்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கருத வேண்டி உள்ளது. கள்ளச்சாராயம் சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து எதிர்கால சந்ததியை பாதுகாப்பதற்கான ஒரு எச்சரிக்கை மணி தான் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம் என்று கூறியுள்ளார்.

The post கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article