
புதுடெல்லி,
நாட்டில் கிரிக்டோகரன்சியில் முதலீடு மேற்கொண்டால் நிறைய லாபம் கிடைக்கும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. பிட்காயின், ரிப்பிள், டெதர் உள்ளிட்ட பல்வேறு கிரிப்டோகரன்சிகள் நாட்டில் புழக்கத்தில் உள்ளன.
அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு, பலரும் இந்த டிஜிட்டல் வடிவிலான திட்டத்தில் இணைந்து பணம் முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில், 2 ஆண்டுகளில் ரூ.350 கோடி அளவுக்கு இத்திட்டத்தில் மோசடி நடந்துள்ளது என தெரிய வந்தது. ஆன்லைன் வழியே கடன்கள் கிடைக்கும், லக்கி ஆர்டர்கள் கிடைக்கும் என பல்வேறு பெயர்களில் மோசடிகள் நடந்துள்ளன.
இதுபற்றி சி.பி.ஐ. அமைப்பு விசாரித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி நடத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை நம்பி முதலீடு செய்த பலரும் மோசடிக்கு ஆளான நிலையில், சி.பி.ஐ. அமைப்பு கடந்த ஜனவரியில் டெல்லி, பஞ்சாப், குஜராத், தமிழகம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டது.
இந்நிலையில், கிரிக்டோகரன்சியுடன் தொடர்புடைய பிட்காயின் ஊழல் தொடர்பாக நாடு முழுவதும் 60 இடங்களில் சி.பி.ஐ. அமைப்பு இன்று விரிவான விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லி என்.சி.ஆர்., புனே, சண்டிகார், நான்டெட், கோலாப்பூர், பெங்களூரு மற்றும் பிற இடங்கள் என 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. இன்று சோதனை மேற்கொண்டு வருகிறது.
இந்த குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என சந்தேகிக்கப்படும் முக்கிய நபர்களோடு தொடர்புடைய இடங்கள், அவர்களின் கூட்டாளிகள் மற்றும் நிறுவனங்களை இலக்காக கொண்டு சோதனை நடந்து வருகிறது.