
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட பெண்ணை, அவரின் கணவரின் கண்முன்னே ஆடைகளைக் களைந்து மானபங்கம் செய்த வழக்கில், காவல் ஆய்வாளராக இருந்த ரங்கசாமி (77), காவலர்கள் வீர தேவர் (68), சின்ன தேவர் (69) ஆகிய மூவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.36,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அந்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், ஊர் மக்களால் மீட்கப்பட்டார். சில நாட்கள் கழித்து அப்பெண்ணின் கணவர் சக்திவேல் விஷம் அருந்தி தற்கொலை செய்தார். இதனை அடுத்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 24 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் திண்டுக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.