*மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் குடிநீர், ஓய்வெடுக்கும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாக பகுதியில் தான் தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்போது செயல்படுகிறது. அதில் மற்றொரு பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்படுகிறது.
இந்த விற்பனை கூடத்துக்கு தற்போது எள் மற்றும் மக்காச்சோளம் வரத்து அதிகரித்துள்ளது. இந்த விற்பனை கூடத்தில் மற்ற விற்பனைக்கூடத்தை காட்டிலும் எள் கொள்முதல் செய்வதில் வியாபாரிகள் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்வதாக கூறப்படுகிறது.
இதற்காக கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் மற்றும் உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம், சின்னசேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து தினந்தோறும் 500 முதல் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தானியங்களை விற்பனை செய்ய காலையில் சுமார் 8 மணியளவில் வாகனத்தில் கொண்டு வருகின்றனர்.
தானியங்களை விற்பனை செய்து அதற்கான விலை விவரங்கள் தெரிந்து கொள்ளவும், மேலும் விற்பனை செய்த தொகை தங்களது வங்கிக்கணக்கில் செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் காலை முதல் மாலை வரை விவசாயிகள் விற்பனைக்கூடத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது.
ஆனால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள விவசாயிகள் காத்திருப்பு அறை கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக பயன்பாட்டுக்கு எடுத்து கொள்ளப்பட்டுவிட்டது. இதனால் விவசாயிகள் தாங்கள் ஓய்வெடுக்க ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாக பகுதியில் உள்ள மரத்தடியில் தங்கி ஓய்வெடுத்து வந்தனர்.
தற்போது அந்த மரத்தடியையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகின்ற பொதுமக்கள், அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால் கடுமையான வெயிலின் தாக்கத்தில் ஓய்வெடுக்க இடம் இல்லாததால் விவசாயிகள் தினந்தோறும் அவதிப்படுகின்றனர்.
இதனால் அலுவலக நுழைவு வாயில் பகுதி தரையில் விவசாயிகள் அமர்ந்து ஓய்வெடுத்து வருகின்றனர். அதிலும் சிலர் அலுவலக பின்புறப்பகுதியில் கழிவறை செப்டிங் டேங்க் கட்டையில் அமர்ந்து ஓய்வெடுக்கும் அவலமும் இருந்து வருகிறது.
இந்நிலையில்போது கள்ளக்குறிச்சி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு தானியங்களை விற்பனை செய்திட வருகை தரும் விவசாயிகளுக்கு குடிநீர் வசதிகள் ஏதும் செய்து கொடுக்காததால் விவசாயிகள் தினந்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்கி ஓய்வெடுக்கும் வகையில் தனி அறைகள் மற்றும் வெயிலின் தாகத்தை போக்கிட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தர மாவட்ட ஆட்சியர் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் appeared first on Dinakaran.