பெருங்குளம் குளத்தில் பழுதான நாளிமடை ஷட்டர் சீரமைப்பு

3 days ago 4

 

ஏரல், மே 8: பெருங்குளம் குளத்தில் பழுதாகி கிடந்த நாளிமடை ஷட்டரை தினகரன் செய்தி எதிரொலியாக நேற்று அதிகாரிகள் சீரமைத்தனர். ஏரல் அருகே பெருங்குளத்தில் 680 ஏக்கர் பரப்பளவுடைய மிகப்பெரிய குளம் உள்ளது. இங்குள்ள 7 பாசன மடை மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், வாழை விவசாயம் நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மழை வெள்ளத்தில் தூர்ந்து போன பாசன மடை வாய்க்கால்களை விவசாயிகளே ஜேசிபி மூலம் தூர்வாரி விவசாய பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் பெருங்குளம் நாளிமடை ஷட்டர் கடந்த 4 மாதங்களுக்கு முன் பழுதடைந்து ஷட்டரை திறக்கவும், அடைக்கவும் முடியாத நிலை இருந்து வந்தது. இதையடுத்து தண்ணீர் வெளியேறாமல் இருப்பதற்கு விவசாயிகள் மணல் மூட்டைகளை மடையில் அடுக்கி வைத்தனர். தண்ணீர் தேவைப்படும்போது மணல் மூட்டைகளை விலக்கி தண்ணீர் பாய்ச்சினர். தற்போது கோடை காலம் என்பதால் குளத்தில் தண்ணீர் வற்றுவதால் மணல் மூடையை எடுத்தாலும் தண்ணீரை கொண்டு போக முடியாத சூழ்நிலை உள்ளது.

எனவே ஷட்டரை திறக்க வேண்டிய கட்டாயத்தால், குளத்தில் தண்ணீர் இருந்தும் பாசனத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் பயிர் கருகி விடுமோ? என விவசாயிகள் கவலையடைந்தனர். இதுகுறித்து தினகரனில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து மருதூர் கீழக்கால் உதவி பொறியாளர் அஜ்மீர்கான் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நேற்று உடனடியாக பெருங்குளம் குளத்தை பார்வையிட்டு பழுதான நாளிமடை ஷட்டரை சீரமைத்தனர்.

அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சீரமைப்பு பணியில் பங்கேற்ற பெருங்குளம் குளம் விவசாய சங்கத் தலைவர் சுடலை கூறுகையில்: பெருங்குளம் குளம் நாளிமடை ஷட்டர் பழுதை சரி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் பெருங்குளம் குளத்து பாசன பகுதி விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

The post பெருங்குளம் குளத்தில் பழுதான நாளிமடை ஷட்டர் சீரமைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article