கஸ்பா ஊராட்சி தெருக்களில் குப்பைகளுடன் தேங்கும் கழிவுநீர்

3 days ago 4

 

செய்துங்கநல்லூர், மே 8: வல்லநாடு கஸ்பா ஊராட்சியில் சாலை, தெருக்களில் தேங்கி கிடக்கும் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வல்லநாடு கஸ்பா ஊராட்சியில் அனைத்து தெருக்களிலும் பெரும்பாலான இடங்களில் குப்பைக்கூளமாக காட்சியளிக்கிறது. மறுபுறம் சாலைகள், தெருக்களில் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே குட்டைபோல் தேங்கி நிற்கிறது.

இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு கழிவுநீரில் இறங்கித்தான் சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல நாட்களாக தேங்கி கிடக்கும், குப்பை மற்றும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. வல்லநாட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற தம்பிராட்டி அம்மன் கோயிலில் வரும் 11, 12ம் தேதிகளில் திருவிழா நடைபெறுகிறது.

இவ்விழாவில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்பார்கள் என்பதால் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதோடு, கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்தித் தர வேண்டுமென சமூக ஆர்வலர் நங்கமுத்து மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சுகாதார மேம்பாட்டு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கின்றனர்.

The post கஸ்பா ஊராட்சி தெருக்களில் குப்பைகளுடன் தேங்கும் கழிவுநீர் appeared first on Dinakaran.

Read Entire Article