
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்
கல்வி உரிமைச் சட்டத்தின்படி (Right to Education Act), தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் 25 சதவீத ஏழை, எளிய மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு அரசே செலுத்தும். அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியில் இத்தொகை முழுமையாகவும், முறையாகவும் செலுத்தப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்டாலின் மாடல் திமுக அரசு, இந்தத் தொகையை செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதாக கல்வியாளர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை துவங்காதது குறித்து பதில் அளிக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சுய புராணங்களைப் பாடுவதில் தீவிரமாக உள்ளனர். மத்திய அரசின் "புதிய கல்விக் கொள்கை"யை ஏற்க மறுத்ததால், நிதி இல்லை என்று திமுக அரசு சால்ஜாப்பு சொல்வதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? இது மாநில அரசு விடுவிக்க வேண்டிய நிதி. அதை கொடுக்க துப்பில்லாமல், வழக்கம்போல் யார் மேலாவது பழியைப் போட்டு தப்பிக்க முயல்வது, இன்னும் எத்தனைக் காலம்?
இதைவிடக் கொடுமை என்னவென்றால், இத்தத் திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தேவையான நெட் சேவையும் இந்த ஸ்டாலின் மாடல் அரசால் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது.உடனடியாக, கட்டாயக் கல்வி உரிமைத் திட்டத்தை முழுமையாக, முறையாக செயல்படுத்த வேண்டும் என்று ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.. என தெரிவித்துள்ளார் .