கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

2 hours ago 2


ராஜகோபுர தரிசனம்!

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயம். கொங்கு நாட்டு சிவாலயமான இத்திருக்கோயில், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.
இத்திருத்தலத்தில் கருங்கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. இதன் ஒரு பக்கத்தில் புகழ்சோழ நாயனார் சிற்பமும், மறுபுறம் சிவலிங்கத்தை நாவால் வருடும் பசுவும், அதன் பின் கால்களுக்கிடையில் ஒரு சிவலிங்கம் உள்ள சிற்பமும் காணலாம். இத்தலத்தில் உள்ள மூலவர் பசுபதீஸ்வரர், தாயார் அலங்காரவல்லி, சவுந்தரநாயகி, கிருபாநாயகி, ஸ்தல விருட்சம் வஞ்சி மரம், தாடகை தீர்த்தம், இத்தலத்தைப் பற்றி திருஞானசம்பந்தர், கருவூரார், அருணகிரிநாதர் பாடியுள்ளனர். மேலும் இங்கு சித்தர் கரூவூராருக்கு, தனி ஆலயம் உள்ளது.

இத்தலத்தினை புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபத்த நாயனார் தொண்டு செய்ததாகவும், தல வரலாறு கூறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் திருக்கோவில்களில், இது 211வது ஆலயம் ஆகும். இத்தல சிவலிங்கத்தின் மீது, மாசி மாதத்தில் தொடர்ச்சியாக 5 நாட்கள், சூரியனின் கதிர் ஒளிபடும் என்பது குறிப்பிடத்தக்கது.தங்களின் கோரிக்கை நிறைவேறும் பக்தர்கள், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது வாடிக்கை.

இன்னும் சிலர் ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இத்தல இறைவன் பசுபதீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். சதுரமான ஆவுடையாரின் மீது, இரண்டரை அடி உயரத்தில் வடபுறமாக சற்றே சாய்வான நிலையில் சிவலிங்கம் அமைந்துள்ளது. இடது பக்கத்தில் அலங்காரவல்லி, சௌந்தரநாயகி சன்னதிகள் உள்ளன.

மூலவரின் நேராக அமைந்துள்ள நந்திக்கு அருகேயுள்ள தூண்களில், புகழ்ச்சோழர் சிவபக்தரின் சிலை உள்ளது. வெளிச்சுற்று பிரகாரத்தில் சித்தர் கருவூரார், ராகு, கேதுவின் சன்னதிகள் உள்ளன. தமிழ்நாட்டின் பழம்பெரும் சிவத்தலங்களிலும் குறிப்பாக கொங்கு நாட்டின் ஏழு சிவத்தலங்களில் ஒன்றாகும் இத்திருக்கோயில். இத்தலத்தின் கட்டடக்கலை சிறப்புமிக்கது. இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு, 1960ம் ஆண்டு குட முழுக்கு விழா நடைபெற்ற பொழுது, ‘புகழ்ச் சோழர் மண்டபம்’ என்று அதற்கு பெயரிடப்பட்டது.

படைக்கும் கடவுளான பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக, சிவன் நடத்திய திருவிளையாடலில் உருவான தலம் இது. சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர், பூலோகத்திலுள்ள வஞ்சிவனத்தில் தவம் செய்தால், அவர் எண்ணம் ஈடேறும் என்று கூறுகிறார். அதன்படி வஞ்சி வனத்திற்கு சென்ற காமதேனு, அங்கு புற்றுக்குள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து திருமஞ்சனம் செய்து வழிபட, மகிழ்ச்சி அடைந்த சிவனும் காமதேனுவுக்கு விரும்பினவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலை அளிக்கிறார்.

காமதேனுவுக்குக் கிடைத்த படைப்பாற்றலால் அஞ்சிய பிரம்மா, தனது தவறை உணர்ந்து, சிவனிடம் போய் தஞ்சம் அடைந்தார். சிவனும் அவரை மன்னித்து, படைப்புத் தொழிலை அவருக்கே திரும்ப அளித்து, காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைத்தார். காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில் சிவன், ‘பசுபதீஸ்வரர்’ என்றும், ‘ஆநிலையப்பர்’ என்றும் அழைக்கப்படுகிறார். காமதேனு இறைவனை வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பை இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணலாம்.

இத்தலம் சுற்று மதில் கொண்டது. கிழக்கு, மேற்காக 465 அடி நீளமும், தெற்கு வடக்காக 205 அடி நீளமும் இதன் மதில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முன் கோபுரம் 120 அடி உயரம் கொண்டது. கோவிலில் உள்ள நூறுகால் மண்டபம் காணவேண்டிய ஒன்றாகும். கோபுரத்தில் திருவிளையாடல் புராணம், தசாவதாரம் ஆகியவை சுதைச் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. உட்கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. இரு ேகாபுரங்களுக்கு இடையே புகழ்ச்சோழர் மண்டபம் அமைந்துள்ளது.

இக்கோயில் திராவிடக் கட்டடக்கலை அம்சத்தை கொண்டுள்ளது. திராவிடக்கலை என்பது தென்னிந்திய கோயில் கலை பாணியாகும். கோயிலின் மையப் பகுதியில் உள்ள கருவறைதான் முதன் முதலில் கட்டப்பட்டது. சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ள கருவறையின் மேல் வட்ட வடிவில் விமானம் உள்ளது. அதற்கு மேல், கலசம். இந்த அமைப்பே ஆரம்ப காலத்தில் கோயில் கட்டும் முறையாக இருந்தது.

கருவறையை அடுத்து அர்த்தமண்டபம். பெரும்பாலும் இந்து கோயில்கள், கருவறை, அதை ஒட்டி அர்த்தமண்டபம் என்ற அமைப்பைக் கொண்டே கட்டப்பட்டிருக்கின்றன. அர்த்தமண்டபத்தை அடுத்து மகா மண்டபம். பிற்காலத்தில் அமைக்கப்பட்ட இந்த மண்டபங்கள் அதிகப்படியான கற்றூண்களைக் கொண்டுள்ளது. கருவறையை சுற்றி பிரகாரத்தை அடுத்து கோயிலின் இடது, பின், வலது புறங்களில் சுற்றிலும் திண்ணையோடு கூடிய சிறு மண்டபம் போன்ற அமைப்பு காணப்படுகின்றது. இது பாடசாலை அல்லது வேத பாராயணம் செய்யும் இடமாக இருந்திருக்கலாம். இத்தலம் சைவம், குறிப்பாக, சிவன் கோயிலின் கட்டடக்கலைப் பாங்கின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் தூண்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சோழர் காலத்தில் கட்டப்பட்டு சேரர், பாண்டியர், கொங்குச் சோழர், நாயக்கர் காலங்களில் படிப்படியாக வளர்ந்து பெரிய கோயிலாக உருவாகியுள்ளது. பிறகு இஸ்லாமியர் ஆட்சிக்காலத்தில் சிதைக்கப்பட்டு, 1905ல் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் இதனை புதிதாக அமைத்ததாக கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் ஆகம விதி மற்றும் வாஸ்து சாஸ்திரம், சைவ சித்தாந்த நெறிப்படி கட்டப்பட்டிருப்பது விளங்கும்.

கோவிலுக்குள் 2 பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் லிங்கத்திற்கு எதிரில் கொடிமரம், அடுத்து பலிபீடம், நந்திகேஸ்வரரின் திருமேனியும் உள்ளன. உட்பிரகாரத்தில் தெற்குச்சுற்றில் 63 நாயன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். அவர்களில் எறிபத்த நாயனாருக்கு தனிச் சன்னதி உள்ளது. மேற்குச் சுற்றில் விநாயகர், கஜலட்சுமி, ஆறுமுகன் ஆகியோரின் திரு உருவங்கள் உள்ளன. வடக்குச் சுற்றில் பஞ்சலிங்க மூர்த்திகள் உள்ளனர். ஈசன் சன்னதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று ஒரு வாயிலைக் கடந்தால் அம்மன் சுந்தரவல்லி சன்னதிதெற்கு பார்த்தபடி அமைந்திருக்கிறது. இவள் கிரியா சக்தி வடிவானவள். இந்த சன்னதியின் இடது புறம் கிழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோவில் இருக்கிறது.

இவள் ஞான சக்தி வடிவானவள். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சர்க்கரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக பெருமை பெற்றது இந்த சிவஸ்தலம்.
கி.பி. 14ம் நூற்றாண்டில் கருவூருக்கு வந்த அருணகிரிநாதர் இக்கோவிலில் உள்ள முருகனைப் பற்றி தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 7 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும், 12 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

திலகவதி

The post கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் appeared first on Dinakaran.

Read Entire Article