கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 8,165 வீடுகள் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்

4 hours ago 3

*கலெக்டர் உத்தரவு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் 8,165 வீடுகளை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது.

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.அப்போது, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25ம் நிதியாண்டில் 3,114 வீடுகள், 2025-26ம் நிதியாண்டில் 5,051 வீடுகள் கட்டப்படுவது குறித்தும், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் 2024-25ம் நிதியாண்டில் 2,305 சிறிய அளவிலான பழுதுகள், 2,910 பெரிய அளவிலான பழுதுகள் என மொத்தம் 5,215 வீடுகள் பழுதுபார்க்கும் பணிகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.

மேலும், இலங்கை தமிழர்களுக்கான வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் அடிஅண்ணாமலை, சமுத்திரம், அத்தியந்தல், கனத்தம்பூண்டி, சொரகுளத்தூர், தென்பள்ளிப்பட்டு, கஸ்தாம்பாடி, தவசி, செங்காட்டன்குன்றில், பாப்பந்தாங்கல், ஒசூர் ஊராட்சிகள் என மொத்தம் 830 வீடுகள் கட்டும் பணியின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

பின்னர், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், அயோத்திய தாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (கிராமியம்), பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் ஆகிய திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தார்.

அதோடு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், புதியதாக தொடங்கப்படவுள்ள முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பயனாளிகளை உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேர்வு செய்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும், குடிநீர் திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்தி கோடை காலத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யவும், சாலைகள் மற்றும் தெருவிளக்குகளை முறையாக பராமரிக்கவும் கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவுறுத்தினார்.

The post கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 8,165 வீடுகள் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article