சென்னை: சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் கடந்த 8 மாதங்களில் எடுத்த அதிரடி நடவடிக்கையால், போதை பொருள் விற்பனை செய்து வந்த 22 வெளிநாட்டினர் உட்பட 2,774 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 21.9 கிலோ மெத்தப்பெட்டமைன், 213 கிராம் ஹெராயின், 67.14 கிராம் கொக்கைன், ரூ.51 லட்சம் ரொக்கம், 63.6 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை போலீஸ் கமிஷனர் அருண் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை பெருநகர காவல் எல்லையில் போதை பொருட்கள் முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு அதிகரடி நவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் கடந்த 5.8.2024ல் ‘போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு’ புதிதாக தொடங்கப்பட்டது. இந்த பிரிவில் ஒரு உதவி கமிஷனர், 2 இன்ஸ்பெக்டர்கள், 5 எஸ்ஐக்கள் மற்றும் 30 காவலர்கள் பணியாற்றுகின்றனர்.
சென்னை பெருநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் செயற்கை போதைப்பொருட்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து தகவலாளிகளை உருவாக்கி, போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் செயற்கை போதைப்பொருள் கும்பலை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சிறப்பு பிரிவு தொடங்கியதன் விளைவாக, கடந்த 8 மாதங்களில் சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 1,044 போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் குறிப்பாக 25 தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், 824 கஞ்சா வழக்குகளில் 1215.53 கிலோ கிராம் கஞ்சா, 112 போதை மாத்திரை வழக்குகளில் 51,229 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 108 செயற்கை போதைப் பொருள் வழக்குகள் உள்ளடக்கம். மேற்படி வழக்குகளில் மொத்தம் 2,774 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.108 செயற்கை போதைப்பொருள் வழக்குகளில் 464 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சென்னை பெருநகர காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 71 செயற்கை போதைப்பொருள் கும்பலில், 548 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அதில் 431 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதில் குறிப்பாக பெங்களூர், மும்பை, டெல்லி ஆகிய மாநிலங்களில் பதுங்கி இருந்து சென்னையில் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த 20 நைஜீரியர்கள், 1 கேமரூன், 1 சூடான் என மொத்தம் 22 வெளிநாட்டவர்களும், வெளி மாநிலங்களான அசாம், கர்நாடகா, ஒடிசா, திரிபுரா, மும்பை மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த 8 பெண்கள் உட்பட 80 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.தொடர் முயற்சி காரணமாக குறிப்பாக, மாதவரம் காவல் நிலைய பகுதியில் 12 பேர் கைது செய்யப்பட்டு, 17 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்து, அதன் தொடர்ச்சியாக அருப்புக்கோட்டையில் இயங்கி வந்த மெத்தபெட்டமைன் தயார் செய்யும் ஆய்வகம் கண்டறிந்து அழிக்கப்பட்டது.
இதுதவிர, சினிமா துறையில் போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின் படி, போதைப்பொருட்கள் விற்பனை செய்து வந்த துணை நடிகை எஸ்தர் (எ) மீனாவை அண்ணா சாலை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்டது. அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. வெளிமாநிலத்தில் இருந்து கொண்டு சென்னையில் செயற்கை போதைப் பொருட்கள் விற்பனை செய்து வந்த சர்வதேச போதைப்பொருள் கும்பலை சேர்ந்த நைஜீரியா, கேமரூன் மற்றும் சூடான் நாட்டினை சேர்ந்த 22 வெளிநாட்டவர்களை கைது செய்து வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை திருச்சி சிறப்பு முகாமில் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (நீதிமன்ற பிணையில் வெளியே வந்த 3 வெளிநாட்டவர்களை திருச்சி சிறப்பு முகாமில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.)
குறிப்பாக, பதிவுசெய்யப்பட்ட 108 செயற்கை போதை பொருள் விற்பனை வழக்குகளில் 21.9 கிலோ மெத்தபெட்டமைன், 1.06 கிலோ மெத்தகுலோன், 39.01 கிலோ கேட்டமைன், 213.28 கிராம் ஹெராயின், 67.14 கிராம் கொக்கைன், 156 எல்எஸ்டி ஸ்டாம், 402 எம்டிஎம்ஏ மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் செயற்கை போதைபோதை பொருள் விற்பனை வழக்குகளில் 90 செல்போன்கள், 12 இருசக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள், ரூ.51 இலட்சம் ரொக்கம், 1 மடிக்கணி மற்றும் 63.6 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2024ம் ஆண்டில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட 300 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 52 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post கடந்த 8 மாதங்களில் போதை பொருள் விற்றதாக சென்னையில் 22 வெளிநாட்டினர் உட்பட 2,774 பேர் அதிரடி கைது: போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை appeared first on Dinakaran.