கரூர்: கரூர் தாந்தோணிமலை அடுத்த தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்தவர் தியாகு(47). தொழிலதிபர். இவரது நண்பர்கள் இதே ஊரை சேர்ந்த பொன்னரசன், சுரேஷ். இவர்கள் இருவரும் சேர்ந்து தொழில் சம்பந்தமாக திண்டுக்கல் வரை சென்று வரலாம் என்று தியாகுவை நேற்று முன்தினம் காரில் அழைத்து சென்றனர். இதைதொடர்ந்து இருவரும், அன்று மதியம் தியாகுவின் உறவினரான அஜித் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு தியாகு உயிரோடு வேண்டும் என்றால் ரூ.15 லட்சம் அனுப்பி வைக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர்.
இதனால் பதற்றமான அஜித் இதுபற்றி போலீசில் உடனே புகார் செய்தார். இதையடுத்து போலீசார், அஜித்துக்கு வந்த போன் எண்ணை டிரேஸ் செய்து விசாரித்தனர். அதில், மதுரை மாவட்டம் கோச்சடை டோல்பிளாசா அருகே டவர் காட்டியது. இதையடுத்து போலீசார் நேற்றிரவு அங்கு சென்று காரில் இருந்த தியாகுவை மீட்டனர். மேலும் காரில் இருந்த பொன்னரசன், சுரேஷ் மற்றும் சிலரை பிடித்து விசாரித்தனர்.
அதில், மதுரையை சேர்ந்த கண்ணன், முத்துப்பாண்டி, குமார், ரவிக்குமார், சிவக்குமார், தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6வது பட்டாலியன் எஸ்ஐ கருப்பசாமி ஆகியோர் தியாகுவை கடத்தி வர சொன்னது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், எஸ்ஐ உள்பட 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பொன்னரசன், சுரேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல் தொழிலதிபரை கடத்திய சப் இன்ஸ்பெக்டர் கைது appeared first on Dinakaran.