அரக்கோணம் அருகிலுள்ள திருத்தலம் தக்கோலம். அங்குள்ள கங்காதீஸ்வரர் ஆலயத்தில் கீழே சுரக்கும் ஊற்று நீர் நந்தியின் வாய் வழியாக ஆலயத்தினுள் இறங்கி கருவறையைச் சுற்றிப் பாயும். அதே நீர் மீண்டும் நுழைவு வாயிலின் கீழே சென்று மற்றொரு நந்தி மூலம் வெளியேறி ஒரு குளத்தில் சென்று அடைகிறது. இந்தக் கலை நுணுக்கம், பார்ப்போரைப் பரவசப்படுத்துகிறது.
கோடாலிகருப்பூர்
அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் தாலுகாவில் இருக்கிறது, கோடாலி கருப்பூர். இந்த ஊரில் வாழ்ந்த ஒரு விவசாயி, விளைபொருட்களை மதுரை சந்தையில் விற்றுவிட்டு லாபத்தில் ஒரு பகுதியை அன்னை மீனாட்சிக்கு அர்ப்பணம் செய்து விடுவான். அன்னையின் அருளால் தான் நல்ல லாபம் கிடைக்கிறது என்பது அவனது நம்பிக்கை.
அதனால் க்கநாதன்மீனாட்சியம்மன் மீது தீவிர பக்தி அவனுக்கு. வயோதிகம் காரணமாக இனி மதுரைக்கு போக முடியாது என்ற நடைமுறை வேதனை அவனைத் தாக்கியபோது, கனவில் வந்து; ‘உன் ஊரிலேயே உனக்காக கோயில் கொள்கிறேன்’ என்று சொல்லி, அதன்படி ஆலயம் கொண்டவர் இத்தல ஈசன். திருமண வரம் வேண்டி, இத்தல அன்னையின் பாதத்தில் ஒரு கிலோ அரிசியுடன் மாங்கல்யச் சரடை வைத்து வழிபட்டு அதை வீட்டிற்கு கொண்டு செல்ல, விரைவில் கெட்டிமேளம் கொட்டும் என்கிறார்கள்.
வீடு பேறு அருள்பவர்
சென்னை – மேற்கு முகப்பேர் பகுதியில் பல சந்நதிகள் அமைந்த கனக துர்க்கா ஆலயம் உள்ளது. இங்கே தனித்தனியே சந்நதிகள் கொண்டுள்ள சரபேஸ்வரர், பிரத்யங்கரா தேவிக்கு அர்ச்சனை செய்து வழிபட, நீண்ட நாட்களாய் வீடுபேறு இல்லாதவர்கள், இல்லம் வாங்கும் யோகம் பெறுவர்.
திருமயிலையில் திருஞானசம்பந்தர், திருக்கல்யாண விழா
சென்னை – மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மூலத்தைக் கடைநாளாகக் கொண்டு திருஞான சம்பந்தர் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இறுதி நாளில் திருஞானசம்பந்தர் வீதி உலா கண்ட பின்னர், கருவறைக்கு முன்னுள்ள பெரிய மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கே ஞான பூரணியாருக்கும் திருஞான சம்பந்தருக்கும் திருமண விழா நடைபெறுகிறது. அதன்பின்னர், உள்பிராகாரத்தை வலம் வந்து ஜோதியில் கலக்கும் ஐதீக விழா நடைபெறுகிறது. அன்று ஒரு நாள் மட்டும் திருஞான சம்பந்தருடன் தோத்திரபூரணி எழுந்தருள்வார்.
கண்ணொளி தருபவர்
புதுக்கோட்டை – தஞ்சாவூர் மார்க்கத்தில் வலப்புறம் மலையடிப்பட்டி என்ற சிற்றூர் உள்ளது. அங்குள்ள குளத்தில் நீராடி, கண் நிறைந்த பெருமாளுக்கு அபிஷேகித்து சந்தன, குங்குமமிட்டு பூஜித்து ஆரத்தி காட்ட, அறுவை சிகிச்சை பொய்த்து பார்வை சரிவர கிடைக்காதவர்களுக்கும் பரிபூரண பார்வை கிடைக்கும்.
தீராத நோயும் தீர்ப்பவர்
பூவிருந்தவல்லியில் உள்ள சிவாலயத்தில் குடிகொண்டுள்ள வைத்தீஸ்வரரை வணங்கிவிட்டு, அத்தலத்தில் அருளும் அன்னை தையல் நாயகிக்கு செவ்வாய்க்கிழமை அன்று, இரண்டு மாவிளக்கு போட்டு, அவ்விளக்கு எரிந்து அடங்கிய பின்பு, மாவிளக்கு பிரசாதத்தை உண்ண, தீராத நோயும் தீர்கிறது.
ஜி.ராகவேந்திரன்
The post கலை நுணுக்கம் மிக்க நந்தி appeared first on Dinakaran.