கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எரித்து கொல்லப்பட்ட வாலிபர் உடல் சொந்த ஊரில் அடக்கம்

3 months ago 20

கலசபாக்கம் : தேவனாம்பட்டு வாலிபர் கொலை தொடர்பாக திருவண்ணாமலையில் கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் நேற்று முன்தினம் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று சொந்த ஊரில் வாலிபரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் இளங்கோவன்(30) திருமணமாகவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் திடீரென மாயமான இளங்கோவன் கடந்த 29ம் தேதி உடலில் பலத்த தீக்காயங்களுடன் தேவனாம்பட்டு கிராமத்தில் சாலையோரம் மயங்கி கிடந்தார். சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி கடந்த 2ம் தேதி இரவு இறந்தார்.

இந்த வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 5ம் தேதி டிஆர்ஓ ராம பிரதீபன், ஏடிஎஸ்பி பழனி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. நேற்று முன்தினம் இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் சமரச பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இறந்த இளங்கோவின் உடல் சொந்த கிராமத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எரித்து கொல்லப்பட்ட வாலிபர் உடல் சொந்த ஊரில் அடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article