கலெக்டர் ஆபீசில் வேலை எனக்கூறி போலி நியமன ஆணை வழங்கிய ஓபிஎஸ் அணி நிர்வாகி கைது

3 hours ago 2

மேட்டூர்: கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல பெண்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடியில் ஈடுபட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். சேலம் மேட்டூரை சேர்ந்தவர் சக்திவேல் (43). இவர் சேலம் நீதிமன்றத்தில் கான்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தீபிகாவின் அக்கா தேன்மொழி, அரசு வேலை தேடிக்கொண்டிருந்தார். கடந்தாண்டு, சேலம் கருப்பூரில் சலூன் கடை நடத்தி வரும் மணிகண்டன் (எ) ராஜ்குமார் (28) என்பவரது தொடர்பு கிடைத்தது. இவர் ஓபிஎஸ் அணியின் ஓமலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக உள்ளார். இவர் சக்திவேல் வீட்டிற்கு நேரில் வந்து, சென்னை தலைமை செயலகத்தில் தான் பணிபுரிவதாகவும், அரசுத்துறைகளில் பல காலி பணியிடங்கள் இருப்பதாகவும், அப்பணியிடங்களை தான் பரிந்துரை செய்து வேலை வாங்கி கொடுப்பதாகவும் அவரிடம் கூறியுள்ளார்.

இதற்காக தீபிகாவிற்கு அரசு வேலை வாங்கித்தர ரூ.2.50 லட்சமும், தேன்மொழிக்கு ரூ.2 லட்சமும் கேட்டுள்ளார். அவர் கூறுவதை உண்மை என்று நம்பிய சக்திவேல், அவரிடம் பணம் கொடுத்துள்ளார். 2023ம் ஜூலை 23ம்தேதி சக்திவேலுக்கு போன் செய்த மணிகண்டன், அரசு வேலையில் சேர்வதற்கான உத்தரவு நகலை, வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். அந்த உத்தரவை வைத்துக்கொண்டு பணியில் சேர, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சக்திவேல், தீபிகா, தேன்மொழியை அழைத்துச்சென்றபோது, அது போலியான அரசு ஆணை என்பது தெரியவந்தது.

இதனால் தன்னை ஏமாற்றிய மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சக்திவேல் சேலம் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்து மணிகண்டனை நேற்று கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மணிகண்டன் சத்துணவு அமைப்பாளர், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிளார்க், வீட்டுவசதி வாரிய அலுவலக கிளார்க் வேலை என பல்வேறு நபர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, தலைமை செயலர் அலுவலகம் வழங்கியது போல் போலி பணி நியமன ஆணைகளை வழங்கி, மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

The post கலெக்டர் ஆபீசில் வேலை எனக்கூறி போலி நியமன ஆணை வழங்கிய ஓபிஎஸ் அணி நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Read Entire Article