நபித்தோழர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.மிக முக்கியமான பிரச்னையோ தீர்வு காணவேண்டிய சிக்கலோ இருந்தால் கலீஃபா உமர், நபித் தோழர்களின் கூட்டத்தைக் கூட்டி கலந்தாலோசனை செய்வது வழக்கம். இந்தக் கூட்டமும் அப்படி ஒரு முக்கியமான பிரச்னை குறித்து விவாதிக்கவே கூடியிருந்தது. விவாதப் பொருளே கலீஃபா உமர்தான். ஆம். அவருடைய ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணவே இந்தக் கூட்டம். இஸ்லாமியப் பேரரசின் ஜனாதிபதியாக கலீஃபாவாகப் பதவி ஏற்பதற்கு முன்பு உமர் வணிகத்தில் ஈடுபட்டு வந்தார். அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். ஆட்சிப் பொறுப்பை ஏற்றபிறகு அவரால் முன்பு போல் வணிகத்தில் ஈடுபட முடியவில்லை. அவருடைய குடும்பத் தேவைக்கு என்ன செய்வது?
நபித் தோழர்கள் அனைவரும் கலந்து பேசினர். பைத்துல்மால் அரசுக் கருவூலத்திலிருந்து கலீஃபாவுக்கு மாத ஊதியம் அளிப்பது என்று ஒரு மனதாகத் தீர்மானமாயிற்று.அடுத்த கேள்வி, மாத ஊதியமாக எவ்வளவு அளிப்பது? தோழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். ஆனால் கலீஃபா உமர், அலீயின் கருத்துக்காகக் காத்திருந்தார்.அனைவரும் பேசி முடித்த பின்னர், அலீ தம் கருத்தைக் கூறினார். “சாதாரண ஒரு குடிமகனுக்கு எளிய முறையில் குடும்பத்தை நடத்திச் செல்ல என்ன செலவாகுமோ அதையே கலீஃபாவுக்கு ஊதியமாக நிர்ணயிக்கலாம்.”ஒட்டுமொத்த கூட்டமும் ஆமோதித்தது. உமரும் எந்த ஆட்சேபணையும் இன்றி கூட்டத்தின் ஒருமித்த கருத்தை
ஏற்றுக் கொண்டார்.
இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது உமர்(ரலி) இஸ்லாமிய உலகின் மகத்தான ஆட்சியாளராக இருந்தார். அன்றைய உலகின் வல்லரசுகளான ரோம், பாரசீகத்தை வெற்றிகொள்ளும் நிலையில் இருந்தார். உலகின் அத்தனை செல்வங்களும் அவருடைய காலின் கீழ் கொட்டிக் கிடந்தன. மக்களுக்குச் சொந்தமான பொதுச்சொத்திலிருந்து ஒரு காசுகூட தவறான முறையில் ஆட்சியாளர் பயன்படுத்தக் கூடாது என்பது இஸ்லாமியச் சட்டம். அந்த அடிப்படையில்தான் உமருக்கு மிகச் சொற்ப அளவில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.அறிஞர் ஷிப்லி நுஃமானி எழுதிய வரலாற்று நூலின் ஓரிடத்தில், “உமரின் அன்றாட குடும்பச் செலவு இரண்டு திர்ஹம் (இரண்டு அணாக்கள்)’’ என்று காணப்படுகிறது. அந்த அளவு எளிமை.
ஒரு முறை உமர் நோய்வாய்ப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் மருந்தைக் கொடுத்து, “இதைத் தேனில் குழைத்துச் சாப்பிடுங்கள்” என்று அறிவுறுத்தினார். உமரின் வீட்டில் தேன் இல்லை. அரசுக் கருவூலத்தில் தேன் இருந்தது. உமர் பள்ளிவாசல் சென்று மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார். பிறகு குடிமக்களிடம் தம் நிலையை விளக்கி, “மருந்து குழைப்பதற்காகச் சிறிதளவு தேனை அரசுக் கருவூலத்திலிருந்து எடுத்துக்கொள்ள அனுமதிப்பீர்களா?” என்று கேட்டார்.குடிமக்கள் அனுமதி தந்தனர்.இதுபோன்ற நிறைய நிகழ்வுகள் உமரின் வாழ்வில் நடைபெற்றுள்ளன. நீதி மிக்க ஆட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாக உமர் திகழ்ந்தார்.
– சிராஜுல் ஹஸன்.
The post கலீஃபாவின் ஊதியம்! appeared first on Dinakaran.