கிரி சக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதா
இதற்கு முந்தைய நாமமான கேய சக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதா என்பது, மந்த்ரிணீ என்று சொல்லக்கூடிய ராஜ ஷியாமளா, மாதங்கியினுடைய பிரபாவத்தைப் பார்த்தோம்.
இந்த நாமாவானது அம்பிகையை மஹா வாராஹி சொரூபத்தில் காண்பித்துக் கொடுக்கிறது. தண்டநாதா என்பது இங்கு மஹா வாராஹியாகும். அம்பிகையினுடைய சேனாதிபதி ஸ்தானத்தில் இருக்கக் கூடியவள்.
அம்பாளினுடைய அதாவது லலிதா மஹாதிரிபுரசுந்தரியினுடைய சக்ரத்திற்கு ஸ்ரீ சக்ரம் என்று பெயர். மாதங்கியான ராஜ ஷியாமளாவிற்கு கேய சக்ரம் என்று பெயர். இங்கு மஹாவாராஹியினுடைய சக்ரத்திற்கு ஒரு பெயர் இருக்கிறது. அதற்குத்தான் கிரி சக்ரம் (Only Kiri – not giri) என்று பெயர். Kiri – கிரி என்றால் வராஹம் என்று பொருள். பன்றி என்று அர்த்தம். அம்பாள் வராஹமுகியாகவும் அருள்கிறாள். பன்றி முகத்தோடு இருக்கக் கூடியவள். இதற்கு நிறைய தத்துவார்த்தங்கள் உண்டு. பன்றி ரூபத்தில் அவள் இருப்பதால் அவளுக்கு கிரி சக்ரம் என்று பெயர்.
இந்த கிரி சக்ரம் என்பதே அம்பாளினுடைய யந்த்ரம். இந்த யந்த்ரமே அம்பாளுக்குரிய ரதமாக மாறுகின்றது. எப்படி சக்ரமே அம்பாளினுடைய ரதமாகின்றது என்று பார்த்தோமே… இதற்கு முந்தைய நாமத்தில் கேய சக்ரமே எப்படி மாதங்கிக்கு ரதமாகின்றது என்று பார்த்தோமோ, அதேபோல வாராஹிக்கு இருக்கக் கூடிய கிரி சக்ரமே அவளுக்கு ரதமாகின்றது. அதனால் அந்த கிரி சக்ரம் என்கிற ரதத்தில் அம்பாள் வீற்றிருக்கிறாள்.
கிரி சக்ரம் என்கிற ரதத்தில் இருக்கிற மஹாவராஹி எங்கிருக்கிறாள் என்பதை முதலில் தெரிந்து கொள்வது முக்கியம்.
பண்டாசூரனோடு போர் செய்வதற்காக அம்பிகை புறப்படும்போது, முன்னால் ஒரு தேர் செல்லும். உதாரணமாக ராஜாவிற்கு முன்னால் எப்போதும் ஒரு தேர் செல்லும். அது யாருடையது எனில், சேனாதிபதியினுடையதாகும். எப்போதுமே போர் எனில் சேனாதிபதியினுடைய தேர்தான் முன்னால் போகும். சேனாதிபதி அந்த சைன்னியங்களையெல்லாம் ஒழுங்கு படுத்திக் கொண்டே சென்றால், ராஜா எளிதாக வரமுடியும்.
இப்போது இந்த நாமாவிற்கு வருவோம்.
அதிலும் தண்டநாதா புரஸ்க்ருதா என்று வருகின்றது பாருங்கள். தண்டநாதாவான அம்பாள் எங்கிருக்கிறாள் எனில், லலிதாம்பிகையின் தேருக்கு முன்னால் வருகின்றாள். அம்பிகைக்கு முன்னால் இருக்கிறாள்… புரஸ்க்ருதா – இதோ முன்னால் சென்று கொண்டிருக்கிறாள் என்று பொருள்.
இது இந்த நாமாவினுடைய வெளிப்படையான அர்த்தம்.
இந்த நாமத்தினுடைய அந்தர்முகமான விஷயம் என்ன என்பதையும் பார்ப்போம்.
இதற்கு முந்தைய இரண்டு நாமங்களான சக்ர ரதா ரூட என்பது யந்த்ரத்தையும், கேய சக்ர ரதாரூட என்பது மந்த்ரத்தையும் காண்பித்துக் கொடுக்கின்றது. அப்படிப் பார்க்கும்போது கிரி சக்ர ரதாரூட தண்டநாதா புரஸ் க்ருதா என்கிற நாமமானது தந்த்ரத்தை காண்பித்துக் கொடுக்கிறது.
ஒரு உபாசனையில் மூன்று விஷயங்கள் மிகவும் முக்கியம் என்று நாம் பார்த்திருக்கிறோம். யந்த்ரம் – மந்த்ரம் – தந்த்ரம். யந்த்ரத்திற்கான விளக்கத்தை முதலில் பார்த்தோம். அந்த யந்த்ரத்தோடு ஒன்று படுத்தக் கூடிய மந்த்ரத்திற்கான விளக்கத்தையும் பார்த்தோம். இப்போது யந்த்ரத்தோடு ஒன்றுபடுத்தக் கூடிய மந்த்ரத்தை குருநாதர் உபதேசம் செய்திருக்கிறார். ஆனால், அந்த யந்த்ரத்தையும் மந்த்ரத்தையும் செயல்படுத்தக் கூடிய ஒரு செயல்முறை இருக்கிறதல்லவா? ஒரு உபாசகன் அந்த யந்த்ரத்தையும் மந்த்ரத்தையும் ஒன்றுபடுத்தி, அதன் மூலமாக ஆத்ம சொரூபமான லலிதாம்பிகை தெரிந்து கொள்வதற்கு செயல்பாடு அங்கு நடக்க வேண்டும். அந்தச் செயல்பாட்டிற்குத்தான் தந்த்ரம் என்று பெயர். அந்தச் செயல்பாட்டை யார் நடத்துகிறார்களோ அவளே மஹாவாராஹி. அவளால்தான் அந்த செயல்பாட்டை நடத்த முடியும்.
ஏனெனில், இதற்கு முன்னால் சொன்ன மந்த்ரம் இருக்கிறதல்லவா… அது வாக்கு. எப்படி ஒரு வாக்கானது உள்ளே சென்றால் மந்த்ரமாகவும், வெளியே சென்றால் நாம சங்கீர்த்தனமாகவும் வருகின்றது என்று பார்த்தோம்.
இப்போது இந்த நாமத்தில் செயலைப்பற்றி பேசுகின்றோம். நாம் செய்யக்கூடிய செயல்கள் இருக்கிறதல்லவா… நம்முடைய மனதில் ஒரு விஷயம். ஒரு எண்ணம் தோன்ற வேண்டும். அதற்குப் பிறகு அது வாக்காக வர வேண்டும். சொல்லாக வர வேண்டும். அதற்குப் பிறகு செயலாக வர வேண்டும்.
முதலில் பார்த்த சக்ர ரதாரூட என்பது மனதினால் மனோரூபமாக ஆத்ம சொரூபத்தை சிந்திப்பது சக்ர வடிவத்தில்தான். அதை வாக்கினால் கொண்டு வரும்போது கேய சக்ர ரதாரூட என்பதாகும். இப்போது மனசும் வாக்கும் சரியாக இருக்கிறது. ஆனால், அங்கு ஒரு செயல்பாடு வர வேண்டுமல்லவா? மனதில் தொடங்கி சொல்லில் வந்து விட்டது. இப்போது செயலில் வர வேண்டுமல்லவா? செயலுக்கு கொண்டு வரவேண்டிய சக்தியை யார் கொடுப்பார்களெனில், தண்டநாதா என்று சொல்லக்கூடிய மஹா வாராஹிதான் கொடுப்பாள். அதனால், கிரி சக்ர ரதாரூட என்று சொல்வது, செயல்பாட்டை குறிக்கக் கூடியதாகும். இயக்கத்தை கொடுக்கக் கூடியது. அறிவியல் ரீதியாகச் சொன்னால் kinetic energy. இயக்க சக்தி. அந்த இயக்க சக்தியை யார் கொடுக்கிறாள் எனில் வாராஹிதான் அளிக்கிறாள்.
அது சரி, இந்த செயல்பாடு வருவதனால் என்ன விஷயம் என்று பார்க்க வேண்டுமல்லவா…
இங்கு நாம் சொல்லக் கூடிய செயல்பாடு என்பது, நாம் சாதாரணமாக லௌகீகத்தில் சொல்லக் கூடிய செயல்பாட்டிற்கும் இந்த செயல்பாட்டிற்கும் வித்தியாசம் உள்ளது. இங்கு நாம் வித்தியாசம் பார்ப்பதனால் லௌகீகம் வேறு. அத்யாத்மம் வேறு என்று பிரிப்பதாக அர்த்தம் கிடையாது. லௌகீகத்தையும் அத்யாத்மத்தையும் பிரிக்கக் கூடாது என்றுதான் ஞானிகளும் கூறுகிறார்கள். இப்போது நாம் செயல்படக் கூடிய சாதாரணமான செயல்பாடு என்பது கர்ம செயல்பாடு. இந்த கர்ம செயல்பாடு நம்மை மீண்டும் மீண்டும் செயலுக்குள் கொண்டு போய்க்கொண்டே இருக்கும். இப்போது நாம் சொல்லக் கூடிய வாராஹி காண்பித்துக் கொடுக்கக் கூடிய செயல்பாடு என்னவெனில், ஞான செயல்பாடு. ஞானத்தினால் நடக்கக் கூடிய செயல்பாடு. அந்த ஞானத்தினால் நடக்கக் கூடிய செயல்பாட்டைத்தான் பகவான் கீதையில் யோகம் என்று சொல்கிறார்.
நாம் சாதாரணமாக செய்யக் கூடிய செயலை கர்மம் என்றும், ஞானத்தினால் செய்யக் கூடிய செயல்பாட்டை யோகம் என்றும் சொல்கிறார். அதனால்தான் கீதையில் கிருஷ்ணர்… யோகஹா கர்மஸு கௌசலம்… என்கிறார். கர்மம் எப்போது ஒரு உயர்ந்த நிலையை அடைகின்றதோ, கர்மம் எப்போது ஒரு மேன்மையான நிலையை அடைகின்றதோ அப்போது அது யோகமாக மாறுகின்றது.
இப்போது வாராஹி கிரி சக்ரத்தில் வரும்போது என்ன செய்கிறாளெனில், இந்த சாதகனுடைய கர்மத்தையெல்லாம் யோகமாக மாற்றுகிறாள். அதுதான் இந்த நாமாவினுடைய விஷயம். இந்த நாமம் என்ன செய்கிறதெனில், it transforms karma into yoga. கீதையில் பகவான் சொல்லக் கூடியதே இதுதான்.
ஏன் மாற்றப்பட வேண்டுமெனில். அது வெறும் கர்மாவாக இருக்கின்ற வரையில் புண்ணிய பாவத்திற்கு உட்பட்டதாக இருக்கும். அப்படி புண்ணிய பாவத்திற்கு உட்பட்டதாக இருக்கின்ற வரையிலும் நமக்கு பிறப்பு இறப்பு உண்டு. பிறப்பு இறப்பு இருக்கின்ற வரையிலும் இந்த சம்சாரம் என்கிற பந்தம் இருக்கும். அதே கர்மா யோகமாக மாறிவிட்டால் என்ன ஆகுமெனில், புண்ணிய பாவம் கிடையாது. சம்சார பந்தம் கிடையாது. அப்போது மோட்சம் சித்திக்கும். அப்போது கர்மாவாக இருக்கும் வரையில் சம்சார பந்தம். அது யோகமாக மாறும்போது மோட்சம் சித்திக்கும்.
(தொடரும்)
The post கர்மாவை யோகமாக மாற்றும் நாமம் appeared first on Dinakaran.