
பெலகாவி,
கர்நாடக மாநிலம் பெலகாவி, மராட்டிய மாநில எல்லையில் அமைந்துள்ளது. அங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் நேற்று காலை மராட்டியத்தில் இருந்து சரக்கு வேனில் சட்டவிரோதமாக பணம் கடத்தி வருவதாக பெலகாவி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே போலீசார் பெலகாவி டவுன் பகுதியில் உள்ள புனே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில், அந்த சரக்கு வேனின் கேபின் பகுதியில் ரகசிய அறை இருந்தது. அந்த அறை கதவை திறந்து போலீசார் சோதனையிட்டனர். அதில் கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடியே 73 லட்சத்து 27 ஆயிரத்து 500 சிக்கியது. இதையடுத்து போலீசார் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். அத்துடன் மராட்டியத்தைச் சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் உள்பட 2 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பாக இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மராட்டிய மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில் சரக்கு வேனில் எடுத்து வந்த ரூ.2.73 கோடி சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.