
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஓம்பிரகாஷ் போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றி இருந்தார். அதன்பிறகு, 2017-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்று விட்டார். தற்போது ஓம்பிரகாசுக்கு 68 வயதாகிறது. பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் ஓம்பிரகாஷ் வசித்து வந்தார். அவரது மனைவி பல்லவி ஆவார்.ஓம்பிரகாசுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஓம்பிரகாஷ் வீடு 2 மாடிகளை கொண்டதாகும். தரை தளத்தில் ஓம்பிரகாஷ் தனது மனைவியுடன் வசித்து வந்தார். முதல் மற்றும் 2-வது மாடியில் மகன் வசித்து வருகிறார். ஓம்பிரகாசுக்கும், அவரது மனைவி பல்லவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கடந் சில ஆண்டுகளாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
அதன்படி, மதியமும் ஓம்பிரகாஷ், பல்லவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பல்லவி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவர் ஓம்பிரகாசை கண்மூடித்தனமாக குத்தியதாக தெரிகிறது.இதில் காயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அதன்பிறகு தனது கணவரை கொலை செய்து விட்டதாக கூறி, போலீசாரை செல்போனில் தொடர்பு கொண்டு பல்லவி தெரிவித்ததாக தெரிகிறது. உடனே சம்பவ இடத்திற்கு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் வீட்டுக்கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டு பல்லவி இருந்துள்ளார். அதன்பிறகு, வீட்டுக்கதவை அவர் திறந்துள்ளார்.
பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது ஓம்பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீடு முழுவதும் ரத்தமாக இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.அலோக் மோகன் மற்றும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த், பிற அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினார்கள். முதற்கட்டமாக நடந்த விசாரணையில் ஓம்பிரகாசை, அவரது மனைவி பல்லவியே கத்தியால் குத்திக் கொன்றது தெரியவந்தது.. இதையடுத்து, பல்லவி கைது செய்யப்பட்டார். அவரை அங்கிருந்து எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.