கர்நாடக துணை முதல்வர் சுவாமி தரிசனம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் என பெருமிதம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

1 month ago 6

திருவண்ணாமலை, அக்.8: அண்ணாமலையார் கோயிலில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அவரது மனைவி உஷா சிவக்குமாருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோயில் பே கோபுரம் வழியாக கோயிலுக்கு வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை, கோயில் இணை ஆணையர் ஜோதி உள்ளிட்டோர் தரிசனத்துக்கு அழைத்து வந்தனர். சம்மந்த விநாயகர் சன்னதியில் வழிபட்ட பிறகு, சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் சிறப்பு தரிசனம் செய்து முடித்ததும், அம்மன் சன்னதி எதிரில் கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர், கோயில் 4ம் பிரகாரத்தில் அமைந்துள்ள காலபைரவர் சன்னதியில், வழிபட்டார். கர்நாடக மாநில துணை முதல்வருடன், திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார், நகர செயலாளர் வெற்றிசெல்வன் உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர். அதைத்தொடர்ந்து, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஏற்கனவே கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது வந்திருந்தேன். தற்போது, மீண்டும் கோயிலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்தமுறை வந்ததைவிட, இந்தமுறை பார்க்கும்போது கோயிலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி சிறப்பாக உள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலின் கட்டுமானமும், கலை நுட்பமும், நம்முடைய கலாசாராத்தை வெளிப்படுத்தும் விதமும் வியக்கத்தக்க வகையில் உள்ளது என்றார். அதைத்தொடர்ந்து, நதிகள் அனைத்தும் தேசியமாக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கடலில் வீணாக கலக்கும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கர்நாடக மாநில அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த அவர், கோயிலில் தரிசனம் செய்ய வந்திருக்கிறேன். அரசியல் கேள்விகள் வேண்டாம் என தெரிவித்தார். முன்னதாக, கர்நாடகாவில் இருந்து ெஹலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை வந்த துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், கிரிவலப்பாதையில் தனியாருக்கு சொந்தமான ஹெலிபேடில் தரையிறங்கினார். அங்கிருந்து, காரில் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்தார்.

The post கர்நாடக துணை முதல்வர் சுவாமி தரிசனம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் என பெருமிதம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.

Read Entire Article