கர்நாடக உள்துறை அமைச்சர் கல்லூரி கணக்கில் இருந்து ரன்யாராவுக்கு ரூ.40 லட்சம் பரிமாற்றம்: அமலாக்கத்துறை ரெய்டில் அம்பலம்; கர்நாடக அரசியலில் பரபரப்பு

4 hours ago 1

பெங்களூரு: கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு சொந்தமான ஸ்ரீ சித்தார்த்தா கல்வி நிறுவனங்களில் 2வது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பரமேஸ்வருக்குச் சொந்தமான ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ சித்தார்த்தா பொறியியல் கல்லூரி உட்பட 16 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பரமேஸ்வர் நடத்தி வரும் கல்லூரி கணக்கில் இருந்து தங்க கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ரன்யா ராவ் கணக்குக்கு ரூ.40 லட்சம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கம் கடத்திய வழக்கில் நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் 3ம் தேதி கைது செய்யப்பட்டார். ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கை சிபிஐ மற்றும் வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் விசாரித்துவரும் நிலையில், அமலாக்கத்துறையும் ரன்யா ராவ் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. அந்தவகையில், இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, பரமேஸ்வரின் கல்வி அறக்கட்டளையிலிருந்து பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது மற்றும் ரன்யா ராவின் கிரெடிட் கார்டு பில் ரூ.40 லட்சம் செலுத்தியதையும் கண்டுபிடித்த நிலையில், அதன்விளைவாகத்தான் ஸ்ரீ சித்தார்த்தா கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் கடந்த 5 ஆண்டுகளாக கல்வி அறக்கட்டளையின் பணப்பரிவர்த்தனைகளை அமலாக்கத்துறை சோதனை செய்திருக்கிறது. 2 நாட்களாக (27 மணி நேரம்) நடத்தப்பட்ட சோதனையை அமலாக்கத்துறை நேற்று மாலை முடித்துக்கொண்டது. அமைச்சர் பரமேஸ்வரின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு விவகாரம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்குவதாக அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

* திருமண பரிசு: டி.கே.சிவகுமார் தகவல்
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கட்சி எம்.எல்.ஏக்கள் பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள அமைச்சர் பரமேஸ்வரின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்து பேசியதுடன், அவருக்கு ஆதரவாக இருப்பதையும் வெளிப்படுத்தினர். இந்த ரெய்டு குறித்து பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ‘‘ரன்யா ராவின் குடும்ப நிகழ்வு அல்லது திருமணத்திற்கு பரமேஸ்வர் ரூ.15-25 லட்சம் கிப்ட்டாக வழங்கியிருப்பார். அதற்காக பரமேஸ்வர், கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட ஊக்குவிக்கிறார் என்று அர்த்தமா? அவர் மிகவும் நேர்மையான மனிதர்’’ என்று தெரிவித்தார். இதற்கிடையே முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்து ரெய்டு குறித்த விவரங்களை பரமேஸ்வர் எடுத்துரைத்திருக்கிறார்.

The post கர்நாடக உள்துறை அமைச்சர் கல்லூரி கணக்கில் இருந்து ரன்யாராவுக்கு ரூ.40 லட்சம் பரிமாற்றம்: அமலாக்கத்துறை ரெய்டில் அம்பலம்; கர்நாடக அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article