தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் சாம்பல் பூசணிக்காய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சாம்பல் பூசணிக்காய் சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறுவது குறித்து தோகைமலை பகுதி பழனிச்சாமி என்ற முன்னோடி விவசாயி பல்வேறு ஆலோசனை வழங்கி உள்ளனர்.
சாம்பல் பூசணிக்காய் என்பது கொடிவகையான காற்கறிகளில் ஒன்று ஆகும். சாம்பல் பூசணிக்காயில் கோ1இ கோ 2இ டயமண்ட் பி.எஸ்.எஸ் 603 ஆகிய ரகங்கள் உள்ளன. இந்த சாம்பல் பூசணிக்காய் சாகுபடியை ஜுலை மற்றும் ஜனவரி மாதங்களில் சாகுபடியை தொடங்கலாம்.
நல்ல ஆழமான இரு மண்பாட்டு நிலத்தில் நன்றாக வளரும் மானாவாரி நிலங்களில் பயிர் செய்வதற்கு களிமண் கலந்த நிலங்கள் இதற்கு சிறந்ததாக இருக்கும். சாம்பல் பூசணிக்காய் சாகுபடி செய்வதற்கு நிலத்தை 3 முதல் 4 முறை நன்றாக உழவு பணிகளை செய்து 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ அகலம் உள்ள நீண்ட வாய்க்கால்கள் அமைத்து வாய்க்கால்களை ஒட்டி 1.5 மீட்டர் இடைவெளியில் 30 செ.மீ நீளம் அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும்.
இந்த குழியில் அடி உரமாக தொழு உரத்தை மேல் மண்ணுடன் கலந்து தோண்டப்பட்ட குழிகளில் இட்டு மூடவேண்டும். அமைக்கப்பட்ட குழிகளில் சாம்பல் பூசணிக்காய் விதைகளை நடுவதற்கு ஒரு எக்டேருக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும்.
சாம்பல் பூசணிக்காய் சாகுபடி செய்வதற்கு அதன் விதைகளை விதைப்பதற்கு முன்பாக ஒரு கிலோ விதைக்கு 2 லிட்டர் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் 6 நாட்கள் கழித்து ஊறவைக்கப்பட்ட விதைகளை தனியாக எடுத்து (விதை நேர்த்தி செய்யப்பட்ட) விதைகளை குழிகளில் விதைக்க வேண்டும்.
இதேபோல் தயார் செய்து உள்ள குழிகளில் வரிசைக்கு விரிசை 2 மீட்டர் செடிக்குச் செடி 1.5 மீட்டர் இடைவெளியில் ஒரு குழிக்கு 3 முதல் 6 விதைகள் வரை ஊன்ற வேண்டும். விதைகள் விதைத்த அடுத்த நாள் கண்டிப்பாக நீர் ஊற்ற வேண்டும். பின்னர் 3வது நாள் குழிகளில் உயிர்த் தண்ணீர் ஊற்றுதல் வேண்டும்.
முளைப்புத்திறன் வந்தவுடன் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ள வாய்க்கால்களின் மூலம் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.சாம்பல் பூசணிக்காய் சாகுபடியில் உரங்களை பயன்படுத்தும் போது விதைக்கப்படும் குழிகளில் குழி ஒன்றுக்கு 1 கிலோ தொழு உரம் மற்றும் 100 கிராம் கலப்பு உரம் இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
30 நாட்கள் கழித்து ஒரு குழிக்கு 10 கிராம் யூரியா என்ற அளவில் மேல் உரமாக இடுதல் வேண்டும். சாம்பல் பூசணிக்காய் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் படர்ந்து உள்ள கொடிகளில் பூக்கள் பூத்து காய்கள் வளர்ச்சி பெறுகிறது. இதில் காய்க்கப்பட்ட பூசணிக்காய்களில் மேல் பகுதியில் இருந்து உருவாகும் சாம்பல் பொருட்கள் உதிரத் தொடங்கும்.
அப்போது பூசணிக்காய்களை அறுவடை செய்யலாம். இதேபோல் பூசணிக்காய் விதைகள் நடவு செய்யப்பட்ட 90ம் நாளில் இருந்து காய்களை அறுவடை செய்யலாம். ஆகவே மேற்கண்ட ஆலோசனைகளை விவசாயிகள் கடைபிடித்தால் ஒரு ஏக்கருக்கு 10 டன் வரை காய்கள் கிடைக்கும் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
The post கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் சாம்பல் பூசணிக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.