சென்னை: கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொதுவெளி என்றும் பார்க்காமல் பேசும் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் படி, புகார்கள் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்தால் புகாரை காவல்துறையினர் முடித்து வைக்கலாம்.
இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்கள் உயர் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யலாம். இந்த வழக்கை பொறுத்தவரை முன்னாள் அமைச்சருக்கு எதிரான நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் முடித்து வைக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து புகார் தாரர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தலைமை வழக்கறிஞர் புகார்தாரர்களிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் புகார்கள் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று விளக்கம் அளித்தார். அதற்கு நீதிபதி, புகார்தாரர்கள் உயர் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யட்டும். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கட்டும். இதுபோல பேசும் நபர்களின் வாயை கட்டுப்படுத்த இந்த நீதிமன்றம் விரும்புகிறது.
மனுதாரர் மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அவர்களின் இதுபோன்ற பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசியல்வாதிகளும் அரசியல் சாசனத்தை பின்பற்ற வேண்டும். அவர் பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாடு அனைத்து குடிமக்களுக்குமானது. சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டும் ஆனது அல்ல. ஆரம்பகட்ட விசாரணை என்பது புகாரில் குறிப்பிட்ட சம்பவம் நடந்ததா இல்லையா என்பது குறித்து விசாரிப்பதுதான். அதன் பிறகு வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கின் முடிவை நீதிமன்றம் தீர்மானிக்கும்.
வேண்டாதவர்களுக்கு எதிராக புகார் வந்தால் அதில் முகாந்திரம் உள்ளதாக கூறும் நிலையில், ஆதரவாளர்கள் என்றால் முகாந்திரம் இல்லை என்று கூறுகிறீர்கள். ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் புலன் விசாரணை அதிகாரி தீர்ப்பு எழுத முடியாது. மைக் முன் பேசும் ஒவ்வொருவரும் தங்களை நாட்டின் மன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். பொன்முடிக்கு எதிரான புகார்களை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தீவிரமாக கருதப்படும். தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
The post கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஷ்டம்போல் பேசுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது: பொன்முடி வழக்கில் ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.