
விசாகப்பட்டினம்,
ஐ.பி.எல். தொடரில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து 164 ரன் என்ற இலக்கை நோக்கி களம் புகுந்த டெல்லி அணி 16 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாஅத்தில் அபார வெற்றி பெற்றது. கடந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து அதிரடியாக ஆடி ரன்கள் குவிக்கும் நடைமுறையை கொண்டுள்ள ஐதராபாத் அணி அதன் காரணமாகவே தோல்விகளை சந்தித்து வருகிறது.
நேற்றைய ஆட்டத்திலும், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து அதிரடியாக விளையாட முயற்சி செய்து ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக தவறான முடிவு எடுத்துவிட்டார் என இந்திய வீரர் செத்தேஷ்வர் புஜாரா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, நீங்கள் அதிரடியான முறையில் விளையாடுவதால் நீங்கள் பெற்றிருக்கும் வெற்றி என்ன?. பத்து போட்டிகளில் இரண்டு போட்டிகளை இப்படி விளையாடி வெற்றி பெறுவதால் என்ன பயன்?. நீங்கள் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளை வெல்ல வேண்டும். அதற்கு நிலைத்தன்மையை காட்ட வேண்டும். அவர்கள் இதே முறையில் கடந்த ஆண்டு லீக் சுற்றில் சிறப்பாக விளையாடினார்கள்.
ஆனால் நாக் அவுட்டில் ஒரு போட்டி தவறாக முடிய மொத்தமும் முடிந்து விட்டது. மேலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், பகலில் விளையாடும் போட்டியில் முதலில் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருக்கும். அந்த நேரத்தில் பந்து வீச சாதகம் இருக்கும். அவர்கள் பந்து வீச முடிவு செய்யாமல் பேட்டிங் செய்ய முடிவு செய்தது மிகவும் தவறான முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.