
மலையாள சினிமாவில் 'ரெட் ரெயின்' என்ற திரில்லர் படம் மூலமாக இயக்குனரானவர், ராகுல் சதாசிவன். இவரது இயக்கத்தில் மம்முட்டி நடித்து 2024-ம் ஆண்டு வெளியான 'பிரமயுகம்' திரைப்படங்கள், ஹாரர் வகையில் வித்தியாசமாக அமைந்திருந்தது.
இந்த நிலையில் 'பிரமயுகம்' படத்தை தயாரித்த நிறுவனம், மீண்டும் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்து உள்ளது. இந்தப் படத்தில் மோகன்லாலின் மகன், பிரணவ் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து விட்ட நிலையில், படத்திற்கான தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. திகிலாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு 'டைஸ் ஐரே' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பு லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. நைட் ஷிப்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதுவும் ஹாரர் படமாகவே உருவாகிறது.
இதுபற்றி படக்குழுவினர் கூறுகையில், "பிரமயுகம் படத்தில் மம்முட்டியைப் போல, இந்தப் படத்தில் பிரணவ் மோகன்லால் ஒரு வலுவான முத்திரையைப் பதிப்பார். 'டைஸ் ஐரே' என்ற சொற்றொடர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் பயன்படுத்தப்படும் 13-ம் நூற்றாண்டின் லத்தீன் பாடலில் இருந்து வந்தது. இதன் பொருள், 'ஆன்மாக்கள் நியாயம் தீர்க்கப்பட்டு சொர்க்கம் அல்லது நரகத்திற்கு அனுப்பப்படும் இறுதித் தீர்ப்பு' என்பதாகும். இது ஒரு திகில் படத்திற்கு பொருத்தமான தலைப்பாக இருந்ததால் இதனை வைத்துள்ளோம்" என்றனர்.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிரணவ் மோகன்லால், 2015-ல் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் இவரது நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான 'ஹிருதயம்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் 'வர்ஷங்களுக்கு சேஷம்' என்பது குறிப்பிடத்தக்கது.