சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை அமைச்சர் சேகர்பாபு இன்று சந்தித்துப் பேசினார். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணைந்தார். திமுக சார்பில் கமல்ஹாசன் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு மக்கள் நீதி மய்யத்துக்கு ராஜ்யசபா சீட்டை திமுக வழங்கும். இதற்கிடையே கடந்த 3 மாதம் வெளிநாட்டில் இருந்த கமல்ஹாசன் இப்போது சென்னை திரும்பி உள்ளார். இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசனை இன்று சந்தித்துள்ளார்.
அப்போது இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பேசியுள்ளனர். குறிப்பாக மக்கள் நீதி மய்யத்துக்கு வழங்கப்பட வேண்டிய ராஜ்யசபா எம்பி பதவி பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் இருந்து தற்போது ராஜ்யசபா எம்பிக்களாக உள்ள மதிமுகவின் வைகோ, திமுகவின் அப்துல்லா, வில்சன், சண்முகம், அதிமுகவின் சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் ஜுலை மாதம் நடைபெற வாய்ப்புள்ளது.
The post கமல்ஹாசனுடன் அமைச்சர்சேகர்பாபு திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.