![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39063394-11.webp)
சென்னை,
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே ஆசியாவிலே உயரமும் நீளமுமான மாத்தூர் தொட்டி பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்டுள்ளதால் முகப்பில் பாலத்தின் கட்டுமானம் மற்றும் பாலத்தின் புள்ளி விவரங்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நிறுவப்பட்டிருந்தது. இந்த கல்வெட்டில் இந்த பாலத்தைக் கட்டிய காமராஜரின் புகைப்படமும் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்,நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த பாலத்தில் உள்ள கல்வெட்டை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதையடுத்து காமராஜரின் உருவப்படம் பொருத்திய கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டு இருப்பதை அறிந்து வேதனை அளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் காவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து விஜய் வசந்த் எம்.பி., தனது எக்ஸ் பதிவில்,
"கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலம் அருகே அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் அவர்களின் உருவப்படம் பொருத்திய கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டு இருப்பதை அறிந்து வேதனை அடைந்தோம். இது குறித்து மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் காவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.
கர்மவீரர் காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட நீர் பாசன அதிசயங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டி பாலத்தில் அவரது நினைவாக அவரது உருவம் என்றும் நிலைத்திருக்க வேண்டும். ஓரிரு தினங்களில் அந்த கல்வெட்டு மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.