
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி கடலின் நடுவே ஒரு பாறையில் அய்யன் திருவள்ளுவர் சிலையும் மற்றொரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அமைந்துள்ளன. விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்ல கடலின் நடுவே கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்ணாடி நடை பாலம் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு மேலும் ஒரு மணிமகுடமாக அமைந்துள்ளது. இந்த கண்ணாடி நடை பாலத்தில் நடந்த சென்றவாறு கீழே உள்ள கடல் அழகை ரசிப்பதுதான் இதன் தனிச்சிறப்பாகும். இந்த பாலம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் இந்த பாலத்தை பார்வையிட வருகை தரும் வெளிநாட்டு, வெளிமாநில, வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த பாலத்தில் நின்றவாறு செல்போன்கள் மூலம் புகைப்படங்கள் எடுத்தும், செல்பி எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்கிறார்கள். வழக்கமாக கன்னியாகுமரியில் சீசன் அல்லாத காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு சீசன் அல்லாத காலமான ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கூட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்தநிலையில் கன்னியாகுமரியில் கடல் நடுவே தமிழ்நாடு அரசு அமைந்துள்ள கண்ணாடி பாலத்தின் அழகை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெருகும் ஆதரவு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 21ம் தேதி முதல் இன்று வரை சுமார் 1 லட்சம் பயணிகள் (வருகை தந்துள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று கூறப்படுகிறது.