அரசு ஊழியர்களுக்கு அணிவித்த நவரத்தின மாலை

3 hours ago 3

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு கூட இல்லை. அனைத்து கட்சிகளும் இப்போதே தேர்தல் ஏற்பாடுகளை தொடங்கி விட்டன. இது நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரிலேயே எதிரொலித்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தொடரின் இறுதியில் காவல் துறை மானியக்கோரிக்கையில் பேசும்போது, 2 நாட்களும் பெரும்பாலும் தேர்தலை அடிப்படையாக வைத்தே பேசினார். முதல் நாளில் அவர் திடீரென்று எழுந்து விதி 110-ன் கீழ் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகுந்த பயன் அளிக்கும், மகிழ்ச்சியை அளிக்கும் 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இது, அவர்கள் கழுத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிவித்த நவரத்தின மாலையாகவே வர்ணிக்கப்பட்டுள்ளது. முதல் அறிவிப்பு, அரசு ஊழியர்கள் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை சரி செய்து அதற்குரிய பணப்பலனை பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பாகும். இதன்மூலம் 8 லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பாதி மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியும். இது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

பணப்பலன் கிடைக்கும் என்ற எண்ணத்தில், இனி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தேவையில்லாமல் விடுமுறை எடுக்க மாட்டார்கள் என்ற வகையில் உற்பத்தி திறன் பெருகும். அடுத்து மத்திய அரசாங்கம் தன் ஊழியர்களுக்கு சமீபத்தில் அறிவித்ததைப் போல 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இதனால் 16 லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், ஏன் ஓய்வூதியதாரர்களும், குடும்ப ஓய்வூதியதாரர்களும் சம்பள உயர்வு மற்றும் பென்ஷன் உயர்வு பெறுவார்கள். அடுத்து, அனைவருக்கும் தங்கள் மத பண்டிகைகளின்போது அதையொட்டிய செலவுக்காக இதுவரை ரூ.10 ஆயிரம் முன்பணமாக வழங்கப்பட்டது. இந்த தொகை ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.

திருமண முன்பணமாக பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம், ஆண்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் இப்போது பல மடங்கு உயர்த்தப்பட்டு, இருவருக்கும் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆக இனி திருமணம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு அந்த செலவுக்கான கவலையே இல்லை. ஒருவேளை மணமக்கள் இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும். இது, அரசு அவர்களுக்கு கொடுக்கும் திருமண பரிசாக வழங்கி வாழ்த்தப்படுகிறது.

அடுத்து பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம பணியாளர்கள் உள்ளிட்ட சி, டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகை ரூ.500, இனி ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், ஓய்வூதியதாரர்கள் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட பண்டிகை கால முன்பணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்படும், ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் தாக்கல் செய்யப்படும், மகப்பேறு விடுப்பாக பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓராண்டு விடுமுறையை பொறுத்தமட்டில் தகுதி காண் பருவத்துக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என அடுத்தடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாமல் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த அறிவிப்புகள் எல்லாம் தேர்தலை மனதில் வைத்தே வெளியிடப்பட்டது என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். அதுவோ, இதுவோ எதுவென்றாலும் அரசு ஊழியர்களை இந்த அறிவிப்புகள் ஆனந்த கடலில் மூழ்கடித்து விட்டது.

Read Entire Article