
காஞ்சிபுரம்,
ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரகாசம், அங்கம்மா தம்பதி. இவர்கள் வாத்து மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றனர். குடும்ப வறுமை காரணமாக அங்கம்மா, சத்தியவேடு பகுதியை சேர்ந்த முத்து- தனபாக்கியம் தம்பதியிடம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கினர்.
அங்கம்மா குடும்பத்தினர் கடனை திருப்பி செலுத்த முடியாததால் தனது 9 வயது மகன் வெங்கடேசை சில மாதங்களுக்கு முன்பு முத்து குடும்பத்தினரிடம் வாத்து மேய்க்கும் வேலை செய்து கழிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் பகுதிக்கு குத்தகைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு வாத்து மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் வெங்கடேசுக்கு கடந்த 30 நாட்களுக்கு முன்பே மஞ்சள் காமாலை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையால் வெண்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக கூறப்படுகிறது.
இதனையெடுத்து சிறுவன் மாற்று சமுதாயம் என்பதால் ஏதேனும் பிரச்சினையாக கூடும் என எண்ணி உடலை காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசந்தாங்கல் பாலாற்றங்கரையில் முத்து அவரது மனைவி தனபாக்கியம் இவர்களது மகன் ராஜசேகர் ஆகியோர் குழி தோண்டி புதைத்து விட்டனர். மகன் குறித்து அங்கம்மா விசாரித்தபோது முத்து குடும்பத்தினர் உரிய பதில் அளிக்கவில்லை.
சந்தேகம் அடைந்த அங்கம்மா ஆந்திர மாநிலம் சத்தியவேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த சத்தியவேடு போலீசார் வெண்பாக்கம் பகுதிக்கு வந்து வாத்து மேய்த்து கொண்டிருந்த முத்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதில், வெங்கடேசுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் காஞ்சீபுரம் பாலாற்றின் கரையில் புதைத்ததாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஆந்திர மாநில போலீசார் முத்து, அவரது மனைவி தனபாக்கியம் மகன் ராஜசேகர் ஆகியோரை கைது செய்தனர். காஞ்சீபுரம் தாலுகா போலீசார் உதவியுடன், சத்தியவேடு போலீசார் பாலாற்றங்கரையில் புதைக்கப்பட்ட வெங்கடேஷ் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக ஆந்திராவுக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.